முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்குன்றத்தில் உள்ள அரிசி ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 17 பேர் மீடபு : உதவி கலெக்டர் அதிரடி.

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      சென்னை
Image Unavailable

செங்குன்றத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் செங்குன்றம் பனையாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இந்த அரிசி ஆலையில் கொத்தடிமைகள் இருப்பதாக சென்னை எழும்பூரில் உள்ள சர்வதேச நீதி குழுமம் தொண்டு நிறுவன நிர்வாகி கிளாடிஸ்பின்னி என்பவருக்கு தகவல் கிடைத்தது. இவர் திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியை சந்தித்து கொத்தடிமைகளை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ஆய்வு

இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் நேற்று அம்பத்தூர் உதவி கலெக்டர் அரவிந்தன், மாதவரம் தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் ரமேஷ், மாதவரம் வருவாய் ஆய்வாளர் வினோத்குமார், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த அரிசி ஆலைக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது மதுராந்தகம் பாக்கம் கிராமத்தை சேர்ந்த சேகர்(வயது 45), சரோஜா(வயது 40), விஜய்(வயது 18), பசுபதி(வயது 15), சரவணன்(வயது 12), ரமேஷ்(வயது 36), கார்த்திக்(வயது 32), மஞ்சுளா(வயது 13), பச்சையப்பன்(வயது 10), சந்தோஷ்(வயது 7), வினோத்(வயது 25), அமுலு(வயது 20), விஸ்வா(வயது 10) காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜீவா(வயது 26), மணிமாலா(வயது 22) மற்றும் மாமல்லபுரத்தை சேர்ந்த செல்வராஜ்(வயது 50), கஸ்தூரி(வயது 40) ஆகியோரிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். அவரிடம் நாங்கள் 8 வருடங்களாக இந்த அரிசி ஆலையில் வேலை செய்து வருகிறோம். ஒரு ஆளுக்கு ரூ.50 கூலி கொடுக்கப்படுகிறது.

காலை 7 மணிக்கு நெல் அவிக்கும் வேலை செய்ய ஆரம்பித்தால் இரவு 8 மணி வரை வேலை செய்ய வேண்டும். சாப்பாடுக்கு பணம் கேட்டால் ஆயிரம், 2 ஆயிரம் என கொடுத்துவிட்டு பொய் கணக்கு எழுதி வொவ்வொருவரும் ரூ.50ஆயிரம் தர வேண்டும் என கணக்கு எழுதி வைத்துள்ளனர். நாங்கள் சொந்த ஊருக்கு போக வேண்டும் என உரிமையாளரிடம் கேட்டால் 50ஆயிரம் ரூபாய் வைத்து விட்டு போக வேண்டும் என மிரட்டி வருகிறார். 8 வருடங்களாக நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு சென்றதே கிடையாது. கடைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட செல்ல அனுமதிப்பது கிடையாது.

அரிசி ஆலை கதவு எப்போதும் மூடியே இருக்கும் என உதவி கலெக்டரிடம் தெரிவித்தனர். அங்கிருந்த 17 பேரும் கொத்தடிமைகளாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இவர்களை மீட்டு அம்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். நேற்று மாலை அவர்கள் அரசு உதவிகளுடன் பாதுகாப்பாக அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கொத்தடிமைகளை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொத்தடிமைகளாக நடத்தியது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சரவணன் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

புழல் உதவி கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் செங்குன்றம் டாக்டர் வைத்தீஸ்வரன் தெருவை சேர்ந்த அரிசி ஆலை குமஸ்தா பாபு(வயது 60) என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய அரிசி ஆலை உரிமையாளர் சீனிவாசனை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து