பறவைக் காய்ச்சல் தடுப்பு பற்றி ராசிபுரம் கோழிப் பண்ணையாளர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      நாமக்கல்
nkjl

 

ராசிபுரம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையாளர்களுக்கு பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஆலோசனைக் கூட்டம் ராசிபுரம் ஆண்டகளூர்கேட் பகுதியில் உள்ள கோழி நோய் ஆராய்ச்சி நிலையத்தில் திங்கள்கிழமை நடந்தது. நாமக்கல் கோழி நோய் ஆராய்ச்சி நிலை மண்டல இணை இயக்குனர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 50க்கும் மேற்ப்பட்ட கோழிப்பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.

 

பறவைக் காய்ச்சல் தடுப்பு

 

கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியில் பறவை காய்ச்சல் காரணமாக கோழிகள் இறந்ததையடுத்து, தமிழகத்தில் குறிப்பாக கோழிப்பண்ணைகள் அதிக அளவில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக எல்லை பகுதிகளில் கோழிகளை ஏற்றிச்சென்று திரும்பும் கனரக வாகனங்களில் மருந்து தெளித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் கோழிப் பண்னைகள் இருப்பதால் பறவைக்காய்ச்சல் வராமல் தடுக்க நாமக்கல் கோழி ஆராய்ச்சி நிலைய மண்டல இணை இயக்குனர் சீனிவாசன் தலைமையில் ராசிபுரம் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணையாள்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உயிரி தொழில்நுட்ப பாதுகாப்பு முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பண்ணைகளில் கோழிகள் இறப்பு ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர், மாநில கோழிப் பண்ணையாளர் சங்கத் தலைவர் ஏ.கே.பி.சின்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பறவைக்காய்ச்சல் நோய் பெங்களூரில் உள்ள ஒரு கடையில் இருந்த 7 நாட்டுக் கோழிகளுக்கு மட்டும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பறவை காய்ச்சல் பாதிப்பு ஏதுமில்லை. எனவே பொது மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். எல்லா கோழிப்பண்ணைகளிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை முறையாக பின்பற்றி வருகிறோம். ஆகவே நாமக்கல் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய் பரவுவதற்கான வாய்ப்பு ஏற்படாது. மேலும் கால்நடை துறை மூலம் மருத்துவக் குழு ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். கூட்டத்தில் கோழி நோய் ஆராய்ச்சி நிலைய உதவி இயக்குனர் விஜயக்குமார் உட்பட 50க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து