முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின்கீழ் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின்கீழ் மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.

விண்ணப்பிக்கலாம்

பூர்த்தி செய்யப்படட விண்ணப்பங்களை அளிக்கும் போது வயதிற்கான ஆதாரச்சான்று மற்றும் ஓட்டுநர் உரிம விவரங்களை தெரிவிப்பது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அம்மா இருசக்கர வாகனத்திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின்கீழ், இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட உள்ளது. அதன்படி, ரூ25,000- அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.  இத்திட்டத்தின்கீழ் வாடிக்கையாளர்களே தங்களது வாகனத்தை தேர்வு செய்யலாம்.  மேலும், வாகனத்தைப் பெற ரிசர்வ் வங்கியால் அதிகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து கடன் பெறலாம்.  125சி.சி திறன் வரையிலான வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும்.அம்மா இருசக்கர வாகனத்திட்டமானது, பணிபுரியும் மகளிருக்கு மட்டுமே அளிக்கப்படும்.  அமைப்பு மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுயமாகத்தொழில் செய்யும் பெண்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசுத்திட்டங்களில் பணியாற்றுவோர், மாவட்ட கற்றல் மையம், கிராம வறுமை ஒழிப்புக்குழுக்கள் ஆகியவற்றில் பணியாற்றுவோர் இந்தத் திட்டத்தின்கீழ், இருசக்கர வாகனங்களைப் பெற விண்ணப்பிக்கலாம்.இருசக்கர வாகனத்திட்டத்தின்கீழ், மானியம் பெற 18 வயது முதல் 40 வயது வரையில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பதாரரின் ஆண்டு வருமான அளவு ரூ.2.5 லட்சத்தைத் தாண்டக் கூடாது.  மிகவும் பின்தங்கிய பகுதிகள், மலைப்பகுதிகள், கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 35 வயதைத் தாண்டிய திருமணம் ஆகாதபெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும்.விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை.  அவற்றை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.  சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.  காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் அளிக்கப்படும்.  விண்ணப்பங்களை வரும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் விரைவஞ்சல் மூலமாகவோ பிப்ரவரி 5, 2018 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.பயனாளிகளை தேர்வு செய்ய மாவட்ட அளவில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அதாவது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் என்ற அளவில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு குழுக்களுக்கும் மாவட்ட ஆட்சியரே தலைவராக இருப்பார்.  வாகனத்திற்கான மானியமானது பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும் என்று வழிகாட்டி நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருசக்கர வானத்துக்கான மானியம் பெறுவோர், சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகிறது.  அதன்படி, வயதுக்கான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்று), ஓட்டுநர் உரிமம், வருமானச்சான்றிதழ் (வேலை அளிப்பவரிடம் இருந்து பெற வேண்டும்), வேலையின் தன்மை குறித்த சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விக்கான சான்றிதழ் (எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்), கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஜாதிச் சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட – பழங்குடியின வகுப்பினராக இருந்தால்) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து