தேனி அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் 62 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      தேனி
bodi Jallikattu- 18 3 18

 போடி.- தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பல்லவராயன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்கள் 61 நபர்களுக்கும், மாட்டின் உரிமையாளர் 1 நபருக்கும் சேர்த்து ஆக மொத்தம் 62 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது.
 தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பல்லவராயன்பட்டியில் உள்ள ஸ்ரீ வல்லடிகார சுவாமி, ஸ்ரீ ஏழை காத்த அம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.
 தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் ஜல்லிக்கட்டு நடைபெறும் களத்தின் வாடிவாசல் முன்பு மாடுபிடி வீரர்களுடன் உறுதிமொழியை வாசித்து ஜல்லிக்கட்டினை துவக்கி வைத்தார். பாரம்பரிய வழக்கப்படி கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொட்டு வணங்கிய மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க தயாரானார்கள். இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத மாடுகளை வளர்த்த மாட்டின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், சில்வர் அண்டா, குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசுகளும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாடுகளுக்கும் கழுத்து மணியுடன் கூடிய பெல்டும்  பரிசாக வழங்கப்பட்டது.
தேவாரம் அருகே உள்ள ஓவுலாபுரத்தை சேர்ந்த சக்தி என்பவருக்கு சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்து ரூ.25000 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.
 போடிநாயக்கனூர் அருகே உள்ள பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 325 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். 14 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் மருத்துவ பரிசோதனையின் போது 7 நபர்கள் மதுபோதையிலும், 3 நபர்கள் எடை குறைவாகவும், 4 நபர்கள் உயர்ரத்த அழுத்தம் காரணமாகவும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக மாடுகளுக்கான டோக்கன் 750 வழங்கப்பட்டது. இதில் போட்டியில் கலந்து கொள்ள வந்த 590 மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எடை குறைவு காரணமாக 6 மாடுகள் போட்டியில் கலந்து கொள்ள கால்நடை மருத்துவ குழுவினர் அனுமதிக்கவில்லை. இதனால் 584 மாடுகள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டன.
 ஜல்லிக்கட்டு போட்டியின் போது காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக 60 பேர் அடங்கிய மருத்துவகுழுவினர், நான்கு நடமாடும் மருத்துவகுழுவினர் வாகனங்கள், ஐந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டது.
 உடற்தகுதி செய்யப்பட்ட மாடுபிடி வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் டி-சர்ட் வழங்கப்பட்டது. இதில் சிலர் உடற்தகுதி சோதனையில் பங்கேற்காமல், மாடுபிடி வீரர்களுக்கான டி-சர்ட் அணிந்த நபர்களை அடையாளம் கண்டு காவல்துறையினர் போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து வெளியேற்றினார்கள்.
 மாடுபிடி வீரர்களுக்கு தேவையான குடிநீர், உணவினை விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் முக்கிய மருத்துவர்கள் கொண்ட குழுக்கள், போதிய பாதுகாப்பு வசதி, நிழற்பந்தல், குடிநீர், கழிப்பறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட அளவிலும், கோட்ட அளவிலும் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் ஒருங்கிணைந்து முன்னேற்பாடுப்பணிகள் மேற்கொண்டனர்.
இவ்விழாவில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வடிவேல், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் விஜயகுமாரன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சென்னியப்பன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) சண்முகசுந்தரம், போடி காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அபிதாஹனீப், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை உட்பட பிறதுறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து