கீழடியில் விரைவில் அருங்காட்சியகம் தொடங்க வேண்டும்: வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை

keladi

 சிவகங்கை,- அகழாய்வுப் பணியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருள்களை காட்சிப் படுத்தும்  வகையில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.     
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள பள்ளிச் சந்தைப் புதூரில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி முதல் 2017 ஆம் ஆண்டு வரை இந்திய தொல் பொருள் அகழாய்வு மையத்தின் சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வரலாற்று தொடக்க கால மக்கள் வாழ்ந்ததற்கான நகர வீடுகள், மண் பாண்ட ஓடுகள், மண்ணால் சுடப்பட்ட மணிகள், மண் அடுக்குகள், முத்து மணிகள், கல் மணிகள், பானைக் குறியீடுகள், கண்ணாடி மணிகள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகள், தந்ததால் ஆன தாயக் கட்டை, சதுரங்க காய்கள், கலை நயமிக்க பானைகள் உள்ளிட்ட  சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கிடைத்தன.
      தற்போது, தமிழக தொல்லியல் துறை மூலம் கடந்த ஏப்ரல் (2018) மாதத்திலிருந்து நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 16 குழிகள் ஒரு பகுதியாகவும், 13 குழிகள் மற்றொரு பகுதியாகவும் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெறுகின்றன. தற்போதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. இதன் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும்  ஐந்தாம்  கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
இந்நிலையில், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும்  என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் ஒருவர் கூறியது: தமிழகம் முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் பழங்கால மக்கள் நகர, நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கு  அடிப்படைச் சான்றாதாரமாக வேறெங்கும் இல்லாத வகையில் ஏராளமான தொல் பொருள்கள் கீழடியில் கிடைத்துள்ளன.  
இவற்றை அதே பகுதியில் காட்சிப்படுத்தி, பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதனை ஏற்ற தமிழக அரசு அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கி விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அருங்காட்சியகம் அமைக்க கீழடி அருகே கொந்தகையில் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து ஒப்படைத்தது.  
   நான்கு கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில்,இன்னும் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதன் மூலம்,கீழடியின் வரலாற்றை மறைக்க தமிழக அரசு முற்படுகிறதா என சந்தேகம் எழுகிறது. ஆகவே, இதனைக் கவனத்தில் கொண்டு அருங்காட்சியகம் அமைப்பதற்கானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து