ஆண்டிபட்டி அருகே கரடிகள் தாக்கியதில் இரண்டு விவசாயிகளுக்கு் பலத்த காயம். கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் ஆறுதல்.

வெள்ளிக்கிழமை, 27 ஜூலை 2018      தேனி
andippati news

ஆண்டிபட்டி.-     ஆண்டிபட்டி அருகே உள்ள பழைய கோட்டையைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளை கரடி தாக்கியதில் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
       தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது வண்டியூர் என்ற பழைய கோட்டை கிராமம். இந்த தனி ஊராட்சியில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மயில், மான், கருமந்தி, குரங்கு, காட்டுப்பன்றி, கரடி, கேளை ஆடுகள் உள்ளிட்ட விலங்கள்அதிகளவில் உள்ளன.அடிவாரப் பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களில் மாம்பழம் ,நாவல் பழம், கொய்யா உள்பட பல பழ வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிது. தற்போது பழ சீசன் என்பதால் நன்கு விளைச்சல் உள்ளது. இந்த வாடைக்கு காட்டு விலங்குகள் உணவிற்காக அடிவாரப் பகுதிக்கு வருவது வழக்கம். எனவே விவசாயிகள் இரவு நேரங்களில் அடிவாரப் பகுதிக்கு செல்வதில்லை.
     இந்நிலையில் நேற்று அதிகாலை ராயவேலூரைச் சேர்ந்த கோபால் மகன் தங்கராஜ் (வயது 70) என்பவரும் வண்டியூரைச் சேர்ந்த கருப்பணன் மகன் தங்கராஜ் (50 ) என்பவரும் ஆடுகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக அடிவாரம் பகுதிக்கு தனித்தனியே சென்றுள்ளனர்.
       .அப்போது ராயவேலூர் தங்கராஜை இரண்டு கரடிகள் சேர்ந்து தாக்கியதில் , நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். ஒரு கரடி அவரின் கால் பகுதியில் கடித்து குதறி உள்ளது. அவரின் அலறல் சத்தத்தில் ஒரு கரடி ஒடி விட்டது. மற்றொரு கரடி வேறு திசையில் சென்று , அங்கு செடிகளை சுமந்து திரும்பிய வண்டியூர் தங்கராஜை கீழே தள்ளி உடல் முழுவதும் நகங்களால் கீறிவிட்டு ஓடி விட்டது.
     இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து தோட்டக்காரர்கள் ஓடி வந்து, இருவரையும் 108 ஆம்புலன்சை வரவழைத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
      சிகிச்சை பெற்று வரும் இருவரையும் தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், மேகமலை வன உயிரின காப்பாளர் கலாநிதி, உதவி வன பாதுகாவலர் குகனேஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மேலும் மருத்துவ கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.
     சம்பவம் குறித்து கலெக்டர்  பல்லவி பல்தேவ் கூறியதாவது, இன்று அதிகாலை கரடிகள் தாக்கி இரு விவசாயிகள் காயமடைந்திருப்பது வருத்தத்திற்குரியது. இனி வரும் காலங்களில் வன விலங்குகள் அடிவாரப் பகுதியில் வராத அளவிற்கு மலை அடிவாரத்தில் வேலிகள் அமைக்க அரசின் அனுமதி பெற்று விரைவில் அமைக்கப்படும். பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் மலைப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் வனத்துறை மற்றும் வருவாய் துறை மூலம் தண்டோரா செய்து, இது குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.
மேலும் மாவட்ட வன அலுவலர் கலாநிதி கூறியதாவது வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மலை அடிவாரப் பகுதியில் வனவர் குமரேசன் தலைமையில் தனிப்படை அமைத்து பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவர் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து