58 கிராம கால்வாயில் தண்ணீர் வருமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018      மதுரை
usilaippatri news

  உசிலம்பட்டி -     வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்
சூழ்நிலை உருவாகி உள்ளது.உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டத்தின் கீழுள்ள 33 கண்மாய்கள், வரத்துக்கால்வாய்கள் சீராக உள்ளதா என வருவாய், பொதுப்பணி, ஊரக வளர்ச்சித்துறையினர் விவசாயிகளுடன் ஆய்வு செய்தனர்.
    இப்பகுதியில் இருபதாண்டுகளுக்கும் மேலாக நடந்த 58 கிராம கால்வாய் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் கண்மாய்கள், வரத்துக் கால்வாய்களின் நிலை குறித்து சீரமைக்க வேண்டும் என முந்தைய கூட்டத்தில் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
    தாசில்தார் நவநீதகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய கமிஷனர் பாலகிருஷ்ணன், குண்டாறு வடிநிலக்கோட்ட உதவி பொறியாளர் பாண்டியன், கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத்தினர் பிரதான கால்வாயில் இருந்து இடது, வலது என பிரியும் உத்தப்பநாயக்கனூரில் ஆய்வு செய்தனர்.
    பெரியாறு, வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கிடைக்கும் மழையால் அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயரும்போது 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கும் வகையில் சட்டர்கள் உள்ளன.
விவசாயிகள் நன்றி
     உசிலம்பட்டியில்  விவசாய குறைதீர் கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவராமன், துணை தாசில்தார் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    முதல் கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அடுத்த கூட்டம் வரும் முன்னே கால்வாயில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்த தாசில்தாருக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் 58 கிராம விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
    மேலும் விவசாயிகள் கூறியதாவது வைகை அணையில் நீர்மட்டம் உயரும்போது 58 கால்வாயில் தண்ணீர் திறந்து வெள்ளோட்டம் பார்க்க வேண்டும்.ரேசன் கடையில் மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை தர வேண்டும். 23-ம் வார்டு டிக்கா நகரில் சாலை வசதி, தெருவிளக்கு, சாக்கடை வசதி வேண்டும். கருக்கட்டான்பட்டி கண்மாய் அருகில் உள்ள சுவற்றை இடித்துவிட்டால் உசிலம்பட்டி கண்மாய் பெருகும். பொட்டுலுபட்டி, பாப்பம்பட்டி, ஆனையூர், கட்டகருப்பன்பட்டி கிராமங்கள் பயன்பெறும் என்றனர்.
    கூட்டத்தில் 58 கிராம கால்வாய் சங்கத்தலைவர் ஜெயராஜ், செயலாளர் பெருமாள், ராசுமாயாண்டி, சிவப்பிரகாசம், தமிழ்செல்வன், இதயராஜா மதுரை மாவட்ட நன்செய், புன்செய் விவசாய சங்க மணிகண்டன், செல்லம்பட்டி முருகன்,சின்னன், தென்னரசு, பேசன் குருவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து