முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலில் கலப்படத்தை கண்டுபிடிக்க 103 பால் குளிருட்டும் நிலையங்களுக்கு 2.6 கோடியில் நவீன கருவிகள் வழங்கப்படும் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி புதிய அறிவிப்பு

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாலில் கேடு விளைவிக்கும் கலப்பட பொருள் சேர்ப்பதை கண்டறியவும் 103 பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு ரூ. 2.06 கோடி மதிப்பீட்டில் பால் கலப்படம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும் என்று பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

தரமான பால் உற்பத்தி செய்ய ஏதுவாக நடைமுறையில் உள்ள பால் பரிசோதனை முறைகளில் உள்ள இடர்பாடுகளை களையும் பொருட்டும், உற்பத்தியாளர்களின் பாலுக்கு சரியான விலை கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டும் 701 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8.76 கோடி மதிப்பீட்டில் தானியங்கி பால் பரிசோதனை கருவிகள் நிறுவப்படும்.

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் ஆரம்ப நிலையில் பாலின் தரத்தினை உறுதி செய்திடவும், பால் மற்றும் பால் உப பொருட்களை உற்பத்தி செய்ய ஏதுவாகவும் காஞ்சிபுரத்தில் 4 அலகுகள், தருமபுரியில் 15 அலகுகள், புதுக்கோட்டையில் 3 அலகுகள், விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி ஒன்றியங்களில் தலா 2 அலகுகளும் மற்றும் திருச்சி ஒன்றியத்தில் ஒரு அலகும், தலா 5000 லிட்டர்  கொள்ளளவு கொண்ட மொத்தம் 34 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

350 மொத்த பால் குளிர்விப்பு மையங்களின் பால் கொள்முதல், பால் பரிசோதனை மற்றும் பால் குளிர்விப்பு செயல்பாடுகளை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும், கண்காணிப்பு வசதிகள் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். எளிய முறையில் பால் கலப்படத்தை கண்டறியவும், தரமான பால் உற்பத்தியை உறுதி செய்யவும், பாலில் கேடு விளைவிக்கும் கலப்பட பொருள் சேர்ப்பதை கண்டறியவும் 103 பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு ரூ. 2.06 கோடி மதிப்பீட்டில் பால் கலப்படம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும்.

பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான தீவனம் வழங்கும் பொருட்டும், அதன் மூலம் பாலின் தரத்தினை உயர்த்திடவும் ஈரோடு கால்நடை தீவன தொழிற்சாலையின் உற்பத்தி திறனை நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன்னிலிருந்து 300 மெட்ரிக் டன் ஆக உயர்த்திட ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

விழுப்புரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் 1982-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்டதாக நிறுவப்பட்டது. தற்போது நாளொன்றுக்கு ரூ.2 லட்சம் லிட்டராக பால் உற்பத்தி உயர்ந்து வருவதை கையாளுவதற்கு ஏதுவாக மேலும் நெய், வெண்ணெய், தயிர் ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்புகள் உள் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ரூ.1.26 கோடி மற்றும் இயந்திர தளவாடங்கள் ரூ.5.19 கோடி உள்பட மொத்தம் ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

மதிப்பு கூட்டப்பட்ட பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரித்து கூடுதல் வருவாய் பெற ஏதுவாகவும் உயர்ந்து வரும் நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாகவும் பன்னீர், லஸ்ஸி, தயிர் ஆகிய பால் உபபொருட்கள் உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் மேம்படுத்தும் பொருட்டு ரூ.3.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

திருநெல்வேலி பால் பண்ணையில் கையாளும் திறனை நாளொன்றுக்கு ஒரு லட்சத்தில் இருந்து 1.5 லட்சம் லிட்டராக உயர்த்திடவும், குல்பி, நறுமணப்பால் ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி பிரிவில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தவும் அதன் மூலம் ஒன்றியத்தின் வருவாயை பெருக்கிடவும் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய நலன்கள் கிடைத்திடவும் ரூ.3 கோடி மதிப்பீட்டில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் புதிய பால் பண்ணை தொழிற்சாலை மற்றும் பால் உபபொருட்கள் உற்பத்தி துவங்கும் வரை தாராபுரம், அவினாசி மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தி்யாளர்களி டமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலை குளிர்விக்க ஏதுவாக மொத்த பால் குளிர்விப்பான்களும், பால் விற்பனை செய்ய பால் குளிர்விப்பு அறைகளும் மற்றும் சேமிப்பு கிடங்குகளும் ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் பரிசோதனை ஆய்வகம், தீவன கிடங்கு மற்றும் தூய முறையில் பால் கொள்முதல் மையத்துடன் கூடிய சொந்த கட்டடங்கள் அமைத்து, சங்கங்கள் திறம்பட செயல்படவும், பால் உற்பத்தியாளர்கள் தரத்துடன் பால் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கவும், கால்நடை தீவனத்தை சேமிக்க வசதி ஏற்படுத்தவும், 250 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் அலகு ஒன்றிற்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 250 அலுவலக கட்டடங்கள் கட்டுவதற்கு மொத்தம் ரூ.37.50 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும்.

தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் உற்பத்தி, உள்ளீடு பிரிவு அலுவலக கட்டடங்களை ஒருங்கிணைக்கவும், செயல்திறன் மேம்பாட்டுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் ஒருங்கிணைந்த அலுவலக கட்டடம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அதிகரித்து வரும் வாழ்வாதார செலவினத்தை நிறைவு செய்வதற்காக கருணை ஓய்வூதியம் ரூ.3500-ல் இருந்து ரூ.4000 ஆகவும், கருணை குடும்ப ஓய்வூதியம் ரூ.1750-ல் இருந்து ரூ.2000 ஆகவும், உயர்த்தி ரூ.2.99 கோடி செலவில் வழங்கப்படும்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மற்றும் களக்காடு பகுதிகளில் நுகர்வோர்களிடையே அதிகரித்து வரும் ஆவின் பால், பால் பொருட்கள் மற்றும் உப பொருட்களின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டும் விற்பனையை அதிகரித்து மாவட்ட ஒன்றிய வருவாய் உயர்த்திடவும், ஒன்றியம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் நலனுக்காகவும், நுகர்வோர்களுக்கு சிறந்த சேவையை அளிக்கும் பொருட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய ஆவின் அதிநவீன பாலகங்கள் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ரூ.50 லட்சம் செலவிலும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ரூ.25 லட்சம் மற்றும் களக்காட்டில் ரூ.50 லட்சம் செலவிலும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து