முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

111-வது பிறந்த நாள்: பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இன்று இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பேரறிஞர் அண்ணா அவர்களின் 111-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் இன்று காலை 10.00 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பேரறிஞர் அண்ணாவின்  பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பேரறிஞர் அண்ணா, காஞ்சிபுரத்தில் நடராசன்- பங்காரு அம்மாள் இணையருக்கு மகனாக 15.09.1909 அன்று பிறந்தார். வளர்ப்புத்தாய் இராஜாமணி அம்மையாரால் வளர்க்கப்பட்டார்.  பேரறிஞர் அண்ணாவின்  துணைவியார் இராணி அம்மையார் ஆவார். பேரறிஞர் அண்ணா, ஏழை, எளிய மக்களிடையே தம் பேச்சாற்றலால் அறிவுப் புரட்சியை உருவாக்கியவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அரசியல் தத்துவார்த்த மந்திராமான வார்த்தையை நாட்டு மக்களுக்கு நல்கியவர். அரசியலில் குடும்ப பாச உணர்வை ஊட்டியவர். மாற்றாரையும் மதிக்கக் கற்றுத் தந்த ஆசான். மாபெரும் ஜனநாயகத் தலைவர்.

பேரறிஞர் அண்ணா 06.03.1967 அன்று தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றார். மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று அழைக்க அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்திடும் பெயர் மாற்றத் தீர்மானத்தை சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றச் செய்தார். சென்னையில் 1968 ஜனவரித் திங்களில் இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டினை நடத்தினார்.  சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்தார். சேலம் உருக்காலைத் திட்டத்தை நிறைவேற்ற, மைய அரசை வற்புறுத்தி, பேரறிஞர் அண்ணா, தமிழ்நாடெங்கும் ‘சேலம் எழுச்சி நாள் நடத்தினார். சென்னையில் கூவம்  சீரமைப்புத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

பேரறிஞர் அண்ணா, தமிழ் வளர்த்த சான்றோர்களுக்கு, சென்னை, கடற்கரைச் சாலையில் சிலைகள் அமைத்துப் போற்றினார். உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலத்தை, சென்னை மாநகரில் நடத்தினார். திருக்குறள் ஆராய்ச்சிக்காக ரூ. 9 லட்சம் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார்.  தாய்மொழி தமிழ், உலக மொழி ஆங்கிலம் ஆகிய இருமொழித் தீர்மானத்தை சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றச் செய்தார். அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தில் சப்-பெலோஷிப் விருது பெற்றார். வாட்டிகன் நகரில் போப்பாண்டவரை சந்தித்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.

தமிழ்நாடு அரசு, பேரறிஞர் அண்ணாவுக்கு , சென்னை, மெரினா கடற்கரையில் நினைவிடம் எழுப்பி அணையா விளக்கை ஏற்றி வைத்து அண்ணா சதுக்கத்தை உருவாக்கி இருக்கிறது. அங்கு அண்ணாவின் அழகு தமிழைக் கேட்க ஒலிச்சாதன வசதி அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா நூலகமும், அண்ணா நூல்கள் விற்பனைக் கூடமும் அண்ணா சதுக்கத்தை அணி செய்கின்றன.  1969-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. 1970-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி இந்திய அரசு அண்ணாவின்  நினைவாக 20 காசு அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது. 1971-ம் ஆண்டு சென்னை மாநகரில் மவுன்ட் ரோடுக்கு அண்ணா சாலை எனப் பெயர் சூட்டப்பட்டது.  தமிழக அரசு வாங்கிய இரண்டு கப்பல்களுக்கு எம்.வி.தமிழ் அண்ணா என்ற பெயரும், தமிழ் அண்ணா என்ற பெயரும் சூட்டப்பட்டன.

1978-ம் ஆண்டு சென்னை, கிண்டியில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திற்கு எம்.ஜி.ஆரால் அண்ணா பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது. மேலும், 1980-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்த இல்லத்தை எம்.ஜி.ஆர். தலைமையில் அமைத்த தமிழக அரசு செப்டம்பர் 16 அன்று அண்ணா நினைவு இல்லமாக மாற்றியது. 1990-ம் ஆண்டு சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு விமான நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டது. மேலும், வேலைக்காரி, ஓர் இரவு, நல்ல தம்பி, சொர்கவாசல் போன்ற நாடகங்கள், ஆரியமாயை, கம்பரசம் மற்றும் ரோமாபுரி ராணிகள் போன்ற பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் அனைத்தும் 1994-ம் ஆண்டு முதல் அம்மாவால்  அரசுடைமையாக்கப்பட்டது. ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தினை அம்மா 09.12.2012 அன்று திறந்து வைத்தார். தமிழக அரசின் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு (இன்று) 15.9.2019 காலை 10.00 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து