முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் பிரச்சினை பற்றி தெரியுமா? கமலுக்கு அரசியலில் என்ன தெரியும்? முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சேலம் : கமலுக்கு அரசியலில் என்ன தெரியும்? மக்களின் பிரச்சினை பற்றி தெரியுமா? என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். ரஜினி என்ன அரசியல் தலைவரா என்று ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்த முதல்வர் எடப்பாடி தற்போது கமலஹாசனுக்கும் கேள்விக்கணை தொடுத்துள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம், ஓமலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

கேள்வி: சென்னையில் காற்றில் மாசு அதிகமாக இருப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
பதில்: ஏற்கனவே,   வருவாய்த் துறை அமைச்சர்  ஊடகத்தின் வாயிலாக இதுகுறித்து தகுந்த விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றார். எந்தெந்த வகையில் மாசு ஏற்பட்டுள்ளதென்று தெரிவித்துள்ளார். புல்புல் புயலினால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது நாம் இருக்கக்கூடிய இந்த இடத்தில் மாசு ஏதும் தென்படவில்லையே!
கேள்வி: பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது போல், காலை உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஏதும் உள்ளதா?
பதில்: தற்போதுவரை அப்படிப்பட்ட திட்டம் ஏதும் அரசிடமில்லை. நிதிநிலை திருப்தியடைந்தவுடன் இது குறித்து அரசு பரிசீலிக்கும்.
கேள்வி: கால்நடைப் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் வருகின்றாரா?
பதில்: கால்நடைப் பூங்கா அமைப்பது மிகப்பெரிய திட்டம். அது தொடர்பாக பல்வேறு பணிகள் இருக்கிறது. இதற்கு முதற்கட்டமாக ரூபாய் 396 கோடி ஒதுக்குகின்றோம். பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். ஏறக்குறைய ரூபாய் 1,000 கோடி அளவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டிருக்கின்றது. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்காவாக அமையவிருப்பதால், அதில் கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். மேலும், இதில் பல்வேறு வகையான திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தற்பொழுது முதற்கட்டப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தப் பணிகள் விரைவாக முடிந்து, கால்நடைப் பூங்கா ஏற்படுத்தப்படும்பொழுது உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். 
கேள்வி: நெடுஞ்சாலைத் துறைக்கு வழங்கிய ரூ.5,000 கோடியை மத்திய அரசு திரும்பப் பெற்றதாக மறுபடியும் ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறதே?
பதில்: நீங்கள் தான் எல்லா ஊடகத்திலும் மாற்றி மாற்றி காட்டினீர்களே? சேலத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்கு 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக அமைப்பதற்கு நிலம் எடுத்தோம், நிலம் கொடுக்கக்கூடாது என்று சொன்னீர்கள். இது எல்லா இடங்களிலும் தொற்றுநோய் போலப் பரவி தமிழகத்தில் எங்கேயும் நிலம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மின்கோபுரம் கொண்டு போவதற்கும் நிலம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், சாலை விரிவுபடுத்துவதற்கும் நிலம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், அரசாங்கம் என்ன செய்ய முடியும்? பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களும் தயவு செய்து அரசுக்குத் துணை நிற்கவேண்டும். விலை மதிக்க முடியாத உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகத் தான் நாங்கள் சாலைகளை விரிவுபடுத்துகிறோம். குறிப்பிட்ட காலத்திற்குள் நாம் நிலத்தைக் கையகப்படுத்தி மத்திய அரசுக்கு கொடுத்தால்தான் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஆனால், நிலத்தை கையகப்படுத்தும்பொழுது பலர் நீதிமன்றத்திற்கு சென்றுவிடுகிறார்கள், சிலர் போராட்டங்கள் நடத்துகிறார்கள், சில அரசியல் கட்சிகள் துணை நிற்கின்றன. ஏன் ஊடகமே துணை நிற்கிறது, பல்வேறு விமர்சனங்களை வைக்கிறீர்கள், எப்படி நாங்கள் விரிவாக்கம் செய்ய முடியும்? பத்திரிகையாளர்களும், ஊடக நண்பர்களும் அரசுக்கு பக்கபலமாக இருந்தால்தான் அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்ற முடியும். பொதுமக்களும் ஒத்துழைப்பை கொடுத்தால் தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும். அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் தான் சாலை விரிவாக்கப் பணியும் நடைபெறும், அதேபோல, மின்கோபுரமும் கொண்டுவர முடியும். தடையில்லா மின்சாரம் வேண்டும் என்கிறோம், நாளுக்கு நாள் மின்சாரத்தின் தேவை அதிகரிப்பதினால், அதற்கேற்றவாறு, மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்றால், மின்பாதை அமைக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்க இயலும். இதையெல்லாம் ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று அன்போடு கோரிக்கை வைக்கிறேன்.
கேள்வி: மக்கள் வீதிக்கு வருவதால்தான் போராட வேண்டியிருக்கிறது?பதில்: மறுபடியும் நீங்கள் திருப்பிக் கேட்கிறீர்கள். அரசாங்கம் எல்லா முயற்சியும் எடுக்கிறது. இன்னும் 10 வருடம் கழித்து என்ன நடக்குமென்று திட்டமிட்டு நாங்கள் செயல்படுத்துகிறோம். 8 வழிச்சாலை முழுவதுமாக நிறைவேற்றுவதற்கு சுமார் ஐந்தாண்டு காலம் ஆகும். இப்படி எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லையென்றால், அரசாங்கத்தால் எப்படி திட்டங்களைச் செயல்படுத்த முடியும்? 2001-2002ல் தோராயமாக 100 லட்சம் வாகனங்கள் என்று இருந்தது, இப்பொழுது 300 லட்சமாக உயர்ந்திருக்கிறது, இதனால், விபத்துகள் அதிகரிக்கிறது. இவையெல்லாம் குறைக்க வேண்டுமென்ற காரணத்தினால் தான் நவீன முறையில் உலகத் தரத்திற்கு ஏற்ற சாலை அமைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சில காலகட்டத்தில், இதற்குத் தடை வருகிறது. தடை வருவதனால், நாம் கொண்டு வருகின்ற திட்டங்களெல்லாம் பாழாகிறது, வீணாகிறது.  இன்றைக்கு தமிழகத்தில் 14 சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று நாம் வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, அதற்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால், முதற்கட்டமாக 4 சாலைகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து, அதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டோம். ஒரு சில இடங்களில் நிலம் எடுத்தோம், பெரும்பாலான இடங்களில் எடுக்க முடியவில்லை. நான் டெல்லிக்கு செல்கின்றபொழுது நேரடியாக  பாரதப் பிரதமர் அவர்களையும்,  மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர்  நிதின் கட்கரி அவர்களையும் சந்தித்து, கோரிக்கை வைத்து, துரிதமாக நிலம் எடுக்கின்ற பணிகளில் நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு, பத்திரிகை மற்றும் ஊடகங்கள் ஆதரவோடும், பொதுமக்கள் ஆதரவோடும், நிலங்களை கையகப்படுத்தி, மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைத்து, அவர்கள் அங்கே பணி செய்வதற்கு அரசு துணை நிற்கும்.
கேள்வி: ரஜினியைப் போன்றே கமலும் அ.தி.மு.க, தி.மு.க-வைப் பற்றி விமர்சனம் செய்துள்ளாரே?
பதில்: வெற்றிடம் என்று சொன்னார். ஏன் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் போட்டியிடவில்லை. கமல் மிகப்பெரிய தலைவர் தானே? நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வளவு ஓட்டுக்களைப் பெற்றார்? இவையெல்லாம், வேண்டுமென்றே திட்டமிட்டு, 65, 66 வயது ஆகிவிட்ட காரணத்தினால், திரைப்படத் துறையில் தகுந்த வாய்ப்பில்லாத காரணத்தினால் கட்சி ஆரம்பிக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், அதில் தவறில்லை. ஆனால் மற்றவர்களை குறை சொல்லிப் பேசுவது தவறாக உள்ளது. இத்தனை காலமாக அவர் எங்கிருந்தார். நான் 1974-லிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கத்தில் சேர்ந்து, பாடுபட்டு உழைத்து இந்நிலைக்கு வந்திருக்கின்றோம். எடுத்தவுடன் நாங்கள் இந்த நிலைக்கு வரவில்லை. ஏறக்குறைய 45 ஆண்டு காலம் கட்சியில் பணியாற்றி இருக்கின்றோம். மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கின்றோம். பல்வேறு பணிகளை மக்களுக்குச் செய்து இப்பொழுது ஆதரவைப் பெற்று இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறோம். அவர்கள் மக்களுக்கு என்ன பணி செய்தார்கள்? திரைப்படங்களில் நடித்தார்கள், வருமானத்தை ஈட்டிக் கொண்டார்கள். இன்று வரை திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இன்று வரை வருமானத்தை உருவாக்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள், மக்களிடத்தில் மிகப்பெரிய செல்வாக்கு இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள். இவர்களைவிட, மிகப்பெரிய நடிகர், மரியாதைக்குரிய  சிவாஜி கணேசன் அவர்களே தேர்தலை சந்தித்து எப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதென்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். அவரைவிடவும் மிகச்சிறந்த நடிகர் இல்லை. பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் நடிகர் திலகம் இருந்தார். அவரெல்லாம் கட்சி தொடங்கி ஏற்பட்ட நிலைமை தான் இவருக்கும் ஏற்படும். வயது முதிர்ந்த காரணத்தினாலே,  கமலஹாசன் அவராகவே இப்படி ஒரு முன்னேற்பாட்டை செய்து கொண்டார். அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர் திரைப்படத்தைப் பார்த்தால்கூட போதுமென்ற நிலைக்கு வந்துவிட்டார் என்று கருதுகின்றேன். அந்த நிலைக்குச் சென்று விட்டார், அதனால் தான் கட்சி ஆரம்பித்துள்ளார். அவருக்கு அரசியலில் என்ன தெரியும்? எத்தனை உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளது என்று தெரியுமா? அந்தப் பகுதி மக்களின் பிரச்சினை தெரியுமா? என்ன அடிப்படை தெரியும்? அடிப்படை தெரியாமலே தலைவர் போன்று உருவாக்கிக் கொண்டார்கள். திரைப்படங்களில் நடித்தார்கள், மக்களின் பணத்தையும் பெற்றுக் கொண்டார்கள், அந்தப் பணத்தின் வாயிலாக இன்றைக்கு அரசியலில் பிரவேசிக்கின்றார்கள்.
கேள்வி:  ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் இதுபோல் தான் வருவாரா?
பதில்: யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், பின்னர் அதற்குண்டான பதில் தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து