முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் ரஜினி, கமல் இணைந்தாலும் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பில்லை - மதுரையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேட்டி

புதன்கிழமை, 20 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும், ரஜினி, கமல் இணைந்தாலும் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பில்லை என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ரஜினி, கமல் இணையப் போவது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது,

தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும், ரஜினி, கமல் இணைந்தாலும் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அமெரிக்க பயணம் முழு வெற்றி பயணமாக அமைந்தது, பல முதலீட்டாளர்களை சந்தித்து பேசினேன். அவர்கள் தமிழகம் வரவிருக்கிறார்கள். தமிழக வீட்டு வசதி துறைக்கு ரூ. 5 ஆயிரம் கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரப்படும்.

பாராளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். யார் இணைந்தாலும், யார் பிரிந்தாலும் அ.தி.மு.க.விற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அரசியலில் எதுவும் நடக்கலாம். 58-ம் கால்வாய் குறித்து கருணாநிதி ஆட்சியில் தவறான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனுடைய உயரம் 57 அடி இருந்த பொழுதுதான் தண்ணீர் எடுக்க வேண்டும் என்பது இருந்தது. இப்போது நிலைமைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம். இருக்கின்ற தண்ணீரை எவ்வாறு சமாளிக்கலாம் என்பது குறித்து ஆய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

கே.டி.ஆர். பேட்டி

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாய பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு அணையை திறந்து வைத்த பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ரஜினி, கமல் ஒன்று சேர்ந்தாலும் அவரது ரசிகர்கள் சேர மாட்டார்கள். ரசிகர்கள் மத்தியில் பல பிரச்சினைகள் உள்ளது. ரஜினி, கமல் ஒரு முடிவு எடுத்தால் மக்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். அ.தி.மு.க.தான் வெல்லும் இரட்டை இலைதான் ஜெயிக்கும். எல்லாமே அதிசயம்தான். உலகமே அதிசயத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிசயத்தில் தான் தலைவர்கள் வருவார்கள். உள்ளாட்சித் தேர்தலை வைத்து எந்த திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. தி.மு.க. கூட்டணியில் தான் பிரச்சனைகள் உள்ளது. அ.தி.மு.க.வில் எந்த பிரச்சனையும் இல்லை. தி.மு.க. கூட்டணி உடையும். ரஜினி காலதாமதப்படுத்தி விட்டார்.  இனி அரசியலுக்கு அவர் வந்தால் சரிவராது. ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். எல்லாக் கட்சியும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்க வேண்டும். அப்போது யாருக்கு பலம் இருக்கும் என்று பார்த்து விடலாம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து