சபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2019      ஆன்மிகம்
sabarimalai 2019 12 02

திருவனந்தபுரம் : சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க நேற்று முன்தினம் வரை 7 லட்சத்து 71 ஆயிரத்து 288 பக்தர்கள் வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கேரளாவில் உலக பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை, மகரவிளக்கு திருவிழாக்களின்போது கோவிலுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். கடந்த ஆண்டு சபரிமலையில் இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்ததால் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு சபரிமலையில் போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் மண்டல பூஜைக்கு நடை திறந்த முதல் நாளே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முதல் 3 நாட்களிலேயே கோவிலின் வருமானமும் 2 மடங்காக உயர்ந்தது. சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க நேற்று முன்தினம் வரை 7 லட்சத்து 71 ஆயிரத்து 288 பக்தர்கள் வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் 52 ஆயிரத்து 60 பக்தர்கள் சபரிமலை வந்தனர். இதில் புல்மேடு வழியாக வந்தவர்கள் மட்டும் 3 ஆயிரத்து 823 பேர் ஆவர்.சபரிமலையில் வரிசையில் நிற்காமல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2 லட்சத்து 96 ஆயிரத்து 113 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு ஆன்லைனில் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. சபரிமலை வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அரவணை, அப்பம் வழங்கப்படும். மண்டல பூஜைக்கு நடை திறந்த நாள் முதல் இதுவரை 20 லட்சம் அரவணை டின்கள் விற்பனை ஆகி உள்ளன. இதனை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது:-

பக்தர்கள் தேவைக்கு அரவணை விநியோகிக்க கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரவணை விற்பனை நிலையங்களில் 15 லட்சம் டின் அரவணை இருப்பில் உள்ளது. அரவணை தயாரிப்பு மையத்தில் தினமும் 2 லட்சம் அரவணை டின்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பிரசாதம் வழங்கப்படும் என்றனர். சபரிமலையில் இப்போது போராட்டங்கள் இல்லை என்றாலும் போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் கடுமையாக உள்ளது. இது குறித்து சபரிமலை போலீஸ் சிறப்பு அதிகாரி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:- சபரிமலையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தினமும் 1,100 போலீசார் பாதுகாப்பு பணி செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலையில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சரங்குத்தி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பக்தர்களை ஒழுங்குப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து