முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கொச்சி : தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது.

இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் இந்தக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. மேலும், வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தேடும் பணியில் என்.ஐ.ஏ. தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

முதலில் அவர் தமிழகத்தில் பதுங்கி இருக்கக்கூடும் என தகவல் வெளியானது.  இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருந்த ஸ்வப்னாவை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா நேற்று மதியம் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. 

அதை தொடர்ந்து தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து கொச்சி கலூர் பகுதியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவருக்கும் கொரோனா பரிசோதனை முடிவு வந்த பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் என்.ஐ.ஏ. அலுவலகம் முன்பு தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து