கொரோனா தடுப்பு பணிகள் - நடவடிக்கை குறித்து திண்டுக்கல், மதுரையில் இன்று முதல்வர் எடப்பாடி ஆய்வு: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Edappadi 2020 08 02

Source: provided

மதுரை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திண்டுக்கல் மற்றும் மதுரை நகருக்கு வருகை தருகிறார்.

இங்கு முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்குகிறார். இன்று இரவு மதுரையில் தங்கும் அவர், நாளை 7-ம் தேதி நெல்லை சென்று அங்கும் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு நடத்துகிறார். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 1.84 கோடி பேர் இந்த தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்று ஆரம்பத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசின் அதிரடி நடவடிக்கைகளால் தற்போது வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் ஆரம்பத்தில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ், தற்போது கணிசமாக குறைந்து விட்டது.

இதே போல் மதுரையிலும் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் கே. ராஜூ ஆகியோரின் அதிரடி நடவடிக்கைகளால் தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்து விட்டது. விரைவில் தமிழகம் முழுவதும் இந்த தொற்றின் பாதிப்பு வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு சென்று அங்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

திண்டுக்கல்லில் ஆய்வு

இதன் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திண்டுக்கல் மற்றும் மதுரை நகருக்கு வருகிறார். முதலில் சேலத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு காலை 9.30 மணியளவில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார்.

அதன் பிறகு முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார். புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதை தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார். பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். அதையடுத்து சிறு, குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பினருடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். அதையடுத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். 

முன்னதாக முதல்வரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் மருதராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்கிறார்கள். திண்டுக்கல்லில் தனது பணிகளை முடித்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நண்பகல் 12.30 மணிக்கு மதுரை புறப்படுகிறார். 

மதுரையில் ஆய்வு

பிற்பகல் 2 மணியளவில் கார் மூலம் மதுரைக்கு வந்து சேரும் முதல்வர் எடப்பாடி நேராக கலெக்டர் அலுவலகம் செல்கிறார். அங்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார். பிறகு ரூ. 326.10 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதன்பிறகு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, எஸ்.எஸ். சரவணன்,பெரிய புள்ளான், மாணிக்கம், நீதிபதி மற்றும் கலெக்டர் வினய், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாய சங்க பிரதிநிதிகளையும், தொழில்துறை நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். 

கோவிட் கேர் சென்டரில் ஆய்வு

அதை தொடர்ந்து காரில் புறப்பட்டு மதுரை அருகே வடபழஞ்சியில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன, 900 படுக்கைகளுடன் கூடிய கோவிட் கேர் சென்டரை அதாவது கொரோனா சிறப்பு மையத்தை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அதன் பிறகு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவில் மதுரையில் தங்குகிறார். 

நெல்லையில் ஆய்வு

நாளை காலையில் நெல்லை புறப்பட்டு செல்லும் முதல்வர் அங்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்துகிறார். நெல்லையில் புகழ் பெற்ற தாமிரபரணி ஆற்றில் ரூ. 18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.

தமிழகத்தில் முதன்முதலாக நதிநீர் இணைப்பு திட்டம் நெல்லை மாவட்டத்தில்தான் செயல்படுத்தப்படுகிறது. அதாவது தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு ஆகிய நதிகளை இணைத்து புதிய கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியையும் முதல்வர் பார்வையிடுகிறார். நெல்லையிலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

மேற்கண்ட நிகழ்ச்சியிகளில் துணை முதல்வர்  ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து