இந்தியா மற்றும் சீனா இடையே மேஜர் ஜெனரல் அளவிலான பேச்சு: ராணுவ வட்டாரங்கள் தகவல்

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      இந்தியா
India-China 2020 07 20

Source: provided

புதுடெல்லி : இந்தியா மற்றும் சீனா இடையே மேஜர் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி இரவில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.  இருதரப்பு வீரர்களும் கற்கள், கம்பிகள் மூலம் ஒருவரையொருவர் தாக்கினர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 

சீனா தரப்பில் 35 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த மோதல் காரணமாக இந்திய - சீன உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எல்லையில் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா படைகளை குவித்தது. 

அதேசமயம் எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் இரு நாடுகளும் மேற்கொண்டன. அதன்படி இரு நாடுகளுக்கிடையே ராணுவ ரீதியில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன.

முதலில் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன்.  பின்னர் இரு நாடுகளின் தூதரக அளவிலான பேச்சுவார்த்தை கடந்த ஜூன் 24-ம் தேதி நடத்தப்பட்டது. 

இந்த பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்வது குறித்து முன்னர் ஒப்புக்கொண்ட புரிந்துணர்வை விரைவாக நடைமுறைப்படுத்துவது எல்லையில் அமைதியை உறுதிப்படுத்த உதவும் என்று இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்த நிலையில், லடாக் பிரிவில் அமைந்த இந்தியா மற்றும் சீனா நாடுகளின் எல்லைகளை பிரிக்கும் உண்மை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து சீன தரப்பில் படைகளை வாபஸ் பெறுவது பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக தவுலத் பெக் ஓல்டி பகுதியில் வைத்து இந்தியா மற்றும் சீனா இடையே மேஜர் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறும் என ராணுவ வட்டாரங்கள் நேற்று தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து