இன்று புரட்டாசி மகாளய அமாவாசை: கோவில்களில் தர்ப்பணம் செய்ய தடை

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      தமிழகம்
Mahalaya 2020 09 16

Source: provided

மதுரை : இன்று புரட்டாசி மகாளய அமாவாசை தினமாகும். இந்த நாளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவில்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக கோவில்களில் தர்ப்பணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மறைந்த நம் பெற்றோர் மற்றும் முன்னோர்களை நினைத்து வருடத்திற்கு 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் இன்றைய அவசர உலகத்தில் 96 முறை தர்ப்பணம் கொடுக்க யாராலும் முடிவதில்லை.

அதனால்தான் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். இந்த மூன்று அமாவாசைகளிலும் மிக சிறந்ததாக கருதப்படுகிறது புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாளாகும். இந்த அமாவாசைக்கு முன்பாக வரும் 15 நாட்கள் மகாளயபட்சம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த 15 நாட்களின் இடையில் மகாபரணி என்ற புனித நாளும் வருகிறது. அப்போதும் சில பக்தர்கள் தர்ப்பணம் கொடுப்பார்கள். அவ்வாறு கொடுக்க இயலாதவர்கள் இன்று வரும் மகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். காரணம், புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு பித்ரு லோகத்தில் இருந்து முன்னோர்கள் பூலோகம் வந்து தங்கள் பிள்ளைகள் தங்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைக்க மாட்டார்களா என்று கவனிப்பார்களாம்.

அதன் காரணமாக பக்தர்கள் இன்று தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பதை மறக்காமல் செய்து வருகிறார்கள். பொதுவாக கோவில்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

ஆனால் தற்போது கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு பல மாதங்களாக நீடித்து வருகிறது. கோவில்கள் கூட சில நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கோவில்களில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்திற்கு வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து விட்டது. அக்னி தீர்த்த கடலில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஈரோடு மாவட்டத்தில் பவானி, கொடுமுடி போன்ற பகுதிகளில் கோவில்கள் மற்றும் குளக்கரைகளில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 

மதுரையில் புகழ் பெற்ற ஆலயம் இம்மையில் நன்மைதருவார் ஆலயமாகும். இங்கு தை, ஆடி, புரட்டாசி அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

ஆனால் இம்முறை கொரோனா பிரச்சினையால் கோவிலில் தர்ப்பணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நன்மை தருவார் கோவில் நிர்வாகம் அறிவித்து விட்டது. இதே போல் திருப்பரங்குன்றத்தில் சரவண பொய்கை பகுதியில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். தர்ப்பணம் கொடுக்க அவர்களுக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. வீட்டுக்கே அந்தணரை வரவழைத்து தர்ப்பணம் கொடுத்தால்தான் உண்டு. ஆனால் எத்தனை பேர் அதை செய்வார்கள் என்பதுதான் புரியவில்லை. எது எப்படியோ, கொரோனா தொற்று பல வகையிலும் மக்களை பாதித்து விட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து