பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடுகிறது: முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020      தமிழகம்
EPS OPS 2020 09 27-1

Source: provided

சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு இன்று அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். இக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாத வாக்கில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலை சந்திக்க கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே தயாராகி வருகின்றன. ஏற்கனவே இரு முறை தொடர்ச்சியாக ஆட்சியை கைப்பற்றிய அ.தி.மு.க.வும் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. பல்வேறு மாவட்டங்களில் உறுப்பினர் சேர்ப்பு முகாம்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று திங்கட் கிழமை சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 9.45 மணிக்கு கூடவுள்ளது.

இக்கூட்டத்திற்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட சுமார் 250 பேர் பங்கேற்கவிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியே முறைப்படி அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. 

கூட்டத்திற்கு வருகை தரும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள செயற்குழு உறுப்பினர்களும் அங்கேயே பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 

இவர்களின் பரிசோதனை முடிவுகள் விவரம் தலைமைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதில் ஒரு சிலருக்கு ‘பாசிட்டிவ்’ என்று முடிவுகள் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.  கொரோனா ‘பாசிட்டிவ்’ உள்ளவர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற வேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

செயற்குழுவில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களை ஓ.பன்னீர்செல்வம் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும், இதே போல் முதல்வர்  எடப்பாடி பழனிசாமியும் தொலைபேசி மூலம் முக்கியமானவர்களுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியின் தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட கூட்டம் கூட்டப்பட்டது.

அப்போது தமிழக தேர்தல் தொடர்பாகவும், முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த கூட்டத்திலும் நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவிருக்கிறார்கள். அதை தொடர்ந்து பல முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து கட்சியின் பொதுக்குழு நடக்கும் தேதியும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் செயற்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு பொதுக்குழுவில்தான் ஒப்புதல் வழங்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

இன்று நடக்கும் செயற்குழுவில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தலில் கூட்டணி அமைப்பது உட்பட பல முக்கியமான விஷயங்கள் ஆலோசிக்கப்படவிருக்கிறது.

எனவே உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்து சில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் அ.தி.மு.க. அவை தலைவர் மதுசூதனனை முதல்வர் எடப்பாடி சில தினங்களுக்கு முன் சந்தித்தார். அவரை தொடர்ந்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் மதுசூதனனை சந்தித்து பேசினார்.

இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த சந்திப்புகளில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த பரபரப்பான சூழலில்தான் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து