பெண்கள் பாதுகாப்பிற்கு மிஷன் சக்தி திட்டம் : உ.பி. முதல்வர் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      இந்தியா
Yogi-Adityanath 2020 10 17

Source: provided

பல்ராம்பூர் : உத்தர பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மிஷன் சக்தி என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பல்ராம்பூரில் நடந்த விழாவில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று, இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். 

அப்போது பேசிய அவர், மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக, பல்ராம்பூரிலிருந்து மிஷன் சக்தி பிரச்சாரத்தை துவக்கி வைப்பதாகவும், மிஷன் சக்தி மாநிலத்தின் ஒவ்வொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்கு உத்தரவாதம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் கூறினார்.  

மாநிலம் முழுவதும் 1535 காவல் நிலையங்களில் பெண்கள் புகார் அளிப்பதற்கு ஏதுவாக ஒரு தனி அறை இருக்கும். அங்கு ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிள் பணியில் இருப்பார். பெண்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்தார். 

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, விழிப்புணர்வு நடனம், நாடகங்களை மாணவர்கள் நிகழ்த்தினர். தற்காப்பு கலை தொடர்பான பயிற்சியையும் செய்து காட்டினர். ஹத்ராஸ், பல்ராம்பூர் பலாத்கார சம்பவங்களை தொடர்ந்து, மிஷன் சக்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து