முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5-வது நீர்த்தேக்கம் தேர்வாய்கண்டிகை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழா: மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று அர்ப்பணிக்கிறார்

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில்  இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரூ. 400 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து, ரூ.  67,378 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அம்மா, மழைநீர் சேகரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார்.  அம்மாவின் வழியில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தவும், நீர்நிலைகளின் கொள்ளளவினை அதிகப்படுத்தி பாதுகாக்கவும், நீர்நிலைகளில் ஒரு சொட்டு நீரும் வீணாகாத வகையில்  ஒரு வலிமையான கட்டமைப்பை உருவாக்குவதோடு, எதிர்கால நீர் தேவையைக் கருத்தில்  கொண்டு நீர்வள பாதுகாப்பு, நீர் மிகைப்படுத்தும் யுக்திகள் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறம்பட செயல்படுத்தி வருகிறார். 

தமிழ்நாடு முழுவதும் நீர் தேக்கங்களை உருவாக்குதல், சிறிய மற்றும் பெரிய அளவிலான தடுப்பணைகள், படுகை அணைகள், புதிய ஏரிகள், கசிவு நீர் குட்டைகள் மற்றும் நீர்நிலைகளை அமைத்தல் போன்ற பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், 89 நீர் தேக்கங்கள், குளங்கள், ஊரணிகள் மற்றும் குட்டைகள் ஆகியவை வரலாற்று சிறப்பு மிக்க குடிமராமத்து திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் மூலம் புனரமைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

ரூ. 1000 கோடியில் தடுப்பணைகள் கட்டும் மூன்றாண்டு திட்டத்தின் கீழ் இதுவரை 164 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது.  கடைமடை வரை தண்ணீர் விரைந்து செல்லும் வகையில் காவேரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு விவசாயிகளின் வரவேற்ப்பை பெற்றுள்ளது.    மேலும், பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம், நடந்தாய் வாழி காவேரி திட்டம், நதிகள் இணைப்புத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதிவேகமாக வளர்ந்து வரும் சென்னை மாநகரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஏற்கனவே உள்ள பூண்டி,  புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு நீர் தேக்கங்களுடன் 5-வது நீர்த்தேக்கமாக கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.  அம்மாவால்  அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டம் ரூபாய் 380 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க தயார் நிலையில் உள்ளது.

இந்நீர்த்தேக்கத்திற்க்காக மொத்தம் 1485.16 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டது.  இதில் 800.65 ஏக்கர் பட்டா நிலம் மற்றும் 54.59 ஏக்கர் வனத்துறை நிலமும் அடங்கும்.   இத்திட்டத்திற்காக பாலவாக்கம் - சத்தியவீடு சாலையில் ஒரு பகுதியை மாற்று சாலையாக 3.60 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நீர்தேக்கத்தின் மூலம் புதியதாக ஏற்கெனவே பாசன வசதி பெற்ற கண்ணன்கோட்டை, இராஜனேரி மற்றும் தேர்வாய்கண்டிகை பெரிய ஏரிகளின் நஞ்சை நிலங்களான 700 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற 5 மதகுகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.  சென்னை குடிநீருக்காக உள்வாங்கி கோபுரம் அமைக்கப்பட்டு சேமிப்பு நீரினை நாள் ஒன்றுக்கு 66 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

இத்திட்டத்தில் கண்டலேறு-பூண்டி கால்வாயின் தொலைக்கல் 2200 மீட்டரில் 8600 மீட்டர் நீளத்திற்கு புதிய கால்வாய் அமைக்கப்பட்டு நீர்த்தேக்கத்திற்கு கிருஷ்ணா நதிநீரை கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  நீர்த்தேக்கம் அமைக்க 7150 மீட்டர் நீளத்திற்கு மண்கரை அமைக்கப்பட்டுள்ளது.  இந்நீர்த்தேக்கத்தில் 500 மில்லியன் கனஅடி நீரை 1100 ஏக்கர் பரப்பளவில் இரண்டு முறையில் வருடத்திற்கு 1000 மில்லியன் கனஅடி நீரினை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இந்நீர்த்தேக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையமாக அமையப்பெறும் மேலும், நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளது.  இவ்வனத்தினால் மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பட்டு, அதிக மழை பொழிவிற்கு வழிவகுக்கும்.  நீர்த்தேக்கத்தின் மூலம் மீன்வளமும் பெருக வாய்ப்புள்ளது.

இந்த நீர்த்தேக்கத்தினால் நீர்த்தேக்கம் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உயரும்.  தற்போது பெய்து வரும் பருவ மழையினால் நீர்த்தேக்கத்தில் 138 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது.   தொடர்ந்து சென்னை மாநகரத்திற்கு மாதம் ஒன்றிற்கு  ஒரு டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. குடிநீர் வழங்கும் நான்கு  நீர்தேக்கங்கள் மூலம் 11 டி.எம்.சி. நீர் என்பது இப்பொழுது 11.75 டி.எம்.சி. ஆக உயர்ந்துள்ளது.  67 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் 5-வது நீர்த்தேக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று  21-ம் தேதி (சனிக்கிழமை) அன்று மாலை  4.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்கத் திட்டத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்-II  மற்றும் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு  தமிழ்நாடு முதல்வர்  எடப்பாடி  பழனிசாமி  தலைமையேற்கிறார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.  400 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தும், ரூ. 61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் II -ஆம் கட்டம், கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் ரூபாய் 1,620 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட சாலைத் திட்டம், கரூர் மாவட்டம், நஞ்சை புகலூரில் ரூபாய் 406 கோடி மதிப்பீட்டில் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூபாய் 309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூபாய் 900 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலியம் முனையம், அமுல்லைவாயலில் ரூபாய் 1,400 கோடி மதிப்பீட்டில் Lube Plant அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ரூபாய் 900 கோடி மதிப்பீட்டில் புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி விழா பேருரையாற்றுகிறார். 

இவ்விழாவில்,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றுகிறார்.  தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார்.    மேலும், இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, வாரியத் தலைவர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

மேலும் இதில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்புரையாற்றுகிறார்.  தொழில் துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம், நன்றியுரையாற்றுகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து