செம்பரம் பாக்கம் ஏரியிலிருந்து நீர் வீணாக போகவில்லை துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி : அரசின் மீது வீண் பழி சுமத்த வேண்டாம்

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : செம்பரம் பாக்கம் ஏரியிலிருந்து நீர் வீணாக போகவில்லை என்று துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார். 

சென்னையில் பள்ளிக்கரனை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த பிறகு முதல்வர் எடப்பாடி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விபரம் வருமாறு

கேள்வி: 2015-ஆம் ஆண்டில் மழை பெய்திருக்கக்கூடிய இடங்கள் தான் இவை. இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்ன?

பதில்: 2015-இல் கனமழை பொழிந்தது. ஆனால் அதற்கும் முன்பே கடந்த காலங்களிலும் தண்ணீர் தேங்கித்தான் இருந்தது. நாங்கள் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் படிப்படியாக தண்ணீரை அகற்றி வருகிறோம். அவ்வாறு ஒவ்வொரு பகுதியிலுமுள்ள தண்ணீரை அகற்றத் தேவையான நிதி ஆதாரம் அரசுக்குத் தேவை. நிதி ஆதாரம் இருந்தால்தான் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும். சென்னை மாநகரத்தைப் பொருத்தவரை 2015-ஆம் ஆண்டு பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. ஆனால் தற்பொழுது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகரம் மற்றும் மாநகரத்தை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலெல்லாம் தண்ணீரை அகற்றக்கூடிய சூழ்நிலையை நீங்களே கண்டிருப்பீர்கள்.

இந்தப் பணிகளை படிப்படியாக நிறைவேற்றிய காரணத்தால்தான் தற்பொழுது குறைவான அளவிலேயே தண்ணீர் தேங்கியுள்ளது. ஒரு நீண்டகாலத் திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உடனே அனைத்தையும் செய்துவிட முடியாது. அதனைச் செயல்படுத்தத் தேவையான நிதி ஆதாரம் மிக முக்கியம். கடந்த காலங்களில் சென்னை மாநகரில் ஏறத்தாழ 3,000 இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்த நிலை தற்பொழுது படிப்படியாக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காகத்தான் நானே நேரடியாக வந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வரவழைத்து இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

கேள்வி: ஒவ்வொரு கனமழைக்கும் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. நீர்நிலைகளை ஒட்டியிருக்கக்கூடிய பகுதிகளில் கட்டடம் கட்ட அனுமதி கொடுக்காமல் இருந்தால் இந்தப் பிரச்சனைகள் வந்திருக்காதே?.

பதில்: 2004-ஆம் ஆண்டு ராம் நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் 20 சதவிகித வீடுகள் தான் இருந்தன. தற்பொழுது 80 சதவிகிதம் வீடுகள் உள்ளன. இவை தாழ்வான பகுதிகள், நீர்நிலைகள் உள்ள பகுதிகள். இந்த இடத்தில் கட்டியதால் தான் இவ்வளவு சிரமம். அவ்வாறு சிரமம் இருந்தாலும், மக்களைக் காக்க வேண்டுமென்பதற்காக இதற்கு ஒரு முழுமையான தீர்வு காண அம்மாவின் அரசு நீண்டகாலத் திட்டமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது.

கேள்வி: பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்பட்டு படகுகள் விடப்படுமென்று அம்மாவின் அரசுதான் அதற்கான நிதி ஒதுக்கியது. அதற்கான வேலைகள் எந்தளவில் உள்ளன? 

பதில்: இத்திட்டங்களை நிறைவேற்ற நிதி தேவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்துவிட முடியாது படிப்படியாகத்தான் செயல்படுத்த முடியும். முதலில் முக்கியமான பிரச்சனைக்குத்தான் தீர்வு காண வேண்டும். தற்பொழுது 3,000 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நிதி தேவையென்பதால் அதற்கான திட்டங்களை படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும். மேலும்,  அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஏதும் கைவிடப்படாது.

கேள்வி: அரசிடம் நிதியில்லையா? மத்திய அரசின் நிதி ஆதாரத்தின் மூலமாகவாவது செயல்படுத்த முடியுமா?

பதில்: இந்தியாவிலிருக்கிற எந்த மாநிலத்திலும் நிதி இல்லை அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரிதான் உள்ளது. உலகளவிலேயும் கிடையாதென்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். உலக வங்கித் திட்டம் மற்றும் மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கித்தான் ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். எல்லா மாநிலங்களும் நிதியை வைத்துக் கொண்டு எந்தத் திட்டத்தையும் அறிவிப்பது கிடையாது. அவ்வப்போது ஏற்படுகின்ற பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இருக்கின்ற நிதியை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவேதான் சென்னை மாநகரத்தில் 3,000 இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது, அதற்குண்டான நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக அதைக் குறைத்திருக்கிறோம். வடிகால் வசதி செய்திருக்கிறோம். மேலும் வடிகால் வசதி செய்வதற்கு திட்டமிடப்பட்டு தொடர்ந்து அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

கேள்வி: நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று கூறியிருக்கிறீர்களே குழு ஏதும் அமைத்திருக்கிறீர்களா?

பதில்: இன்றைக்குத்தான் நான் நேரில் வந்து பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்தால்தான் தாழ்வான பகுதிகளிலிருக்கின்ற தண்ணீரை எப்படி நாம் வெளியேற்றுவது என்பது தெரியும்.  சம்பந்தபட்ட அதிகாரிகளும் இங்கு வந்திருக்கிறார்கள். அந்த அதிகாரிகள் குழு அதை ஆய்வு செய்து அதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்கும். 

கேள்வி: நிரந்தரத் தீர்வு எட்டுவதற்கு, தோராயமாக எத்தனை ஆண்டுகள் ஆகும்? 

பதில்: இந்தப் பணியை துவங்கியிருக்கிறோம், அந்தப் பணி செய்வதற்கு எவ்வளவு கால அளவு வேண்டுமென்பதை அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நிர்ணயிப்பார்கள். அந்த கால அளவிற்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும். அனைத்துப் பணிகளும் திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதைப் போல இந்தப் பணியும் திட்டமிட்டு செயல்படுத்தப்படும். 

கேள்வி: கிருஷ்ணா நதியிலிருந்து அதிகப்படியான நீர் வெளியாகிறது காவேரி ஆற்றிற்கு கொடுக்கக்கூடிய முன்னுரிமையை அதிமுக அரசு பாலாற்றுக்கு கொடுக்கவில்லையென்று வருகின்ற குற்றச்சாட்டு குறித்து...

பதில்: பாலாற்றில் பல திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருக்கிறது. நான் ஏற்கனவே கூறியதைப் போன்று நிதி ஆதாரம் மிக முக்கியம். இன்றைக்கு, பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுப்பதற்குத்தான் அதிமுக அரசு, ரூபாய் 1,000 கோடி நிதி ஒதுக்கி, மூன்றாண்டு காலத் திட்டத்தில் பல இடங்களில் தடுப்பணை கட்டி இப்பொழுது தண்ணீர் நிறைந்திருக்கிறது. தற்பொழுதுகூட, பவானிசாகரில் இருக்கின்ற 6 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் இதற்கென்று நீர் மேலாண்மைப்படுத்துவதற்காக ஓய்வு பெற்ற 2 தலைமைப் பொறியாளர்கள் 

3 கண்காணிப்புப் பொறியாளர்கள் என  5 பொறியாளர்களை நியமித்து தமிழ்நாடு முழுவதும் பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் வீணாவதை சேமிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்வது, எங்கெங்கெல்லாம் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கணக்கிட்டு அவர்கள் கொடுக்கின்ற அறிக்கையின்படி இப்பொழுது 

ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் கட்டிக் கொண்டிருக்கிறோம்.  ஏறத்தாழ 

85, 90 சதவீதம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது, அடுத்து ரூபாய் 1,000 கோடி ஒதுக்கீடு செய்து ஆங்காங்கே தடுப்பணை கட்டுவோம்.  இதற்கு முன்பு எத்தனை தடுப்பணை கட்டினார்கள்? நான் வந்தபிறகு தானே தடுப்பணையே கட்ட ஆரம்பித்திருக்கிறோம் அதேபோல தூர்வாரியிருக்கிறோம். அதேபோல, பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள 14,000 ஏரிகள் மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ள 26,000 ஏரிகள் என 

40,000 ஏரிகள் இருக்கின்றன. இந்த 40,000 ஏரிகளை ஒரே நேரத்தில் தூர்வாருவது என்பது இயலாத ஒன்று அதற்கு நிதி தேவை. எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட ஏரிகளை எடுத்து அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, தூர்வாருகின்ற பணியில் நாங்கள் செயல்பட்டிருக்கிறோம். இப்படி தூர்வாரிய காரணத்தினால்தான் பல ஏரிகள் இன்றைக்கு நிரம்பிக் காட்சியளிக்கின்றன. அதேபோல, படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் எஞ்சிய ஏரிகள் அனைத்திற்கும் வேண்டிய நிதி ஒதுக்கீடு செய்து, தூர்வாரப்படும். 

கேள்வி: நீர் மேலாண்மையில் தமிழ்நாடு முதலிடம் வந்திருக்கிறது. குடிமராமத்துப் பணி சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் சென்னையிலுள்ள நீர்நிலைகளை பாதுகாக்க அரசு என்ன செய்ய இருக்கிறது?

பதில்: சென்னை மாநகரத்திற்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளைத் தூர்வார வேண்டுமென்பதற்காக ரெவின்யூ மாடலில் டெண்டர் விட்டுள்ளோம். அதில் தண்ணீர் இருந்ததால் எடுக்க முடியவில்லை. நான்கு ஏரிகளுக்கும் டெண்டர் விட்டுவிட்டோம். அதன் மூலமாக அரசாங்கத்திற்கு வருவாய் வருகிறது. இப்பொழுது நீர் நிரம்பியிருப்பதால், அந்தப் பணியை மேற்கொள்ளாமல் இருக்கிறோம். பூண்டி ஏரியைப் பொறுத்தவரை, தனிப்பட்ட ஒருவர் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது.

கேள்வி : நீர்நிலைகளில் கட்டியிருக்கிற வீடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? ஆக்கிரமிப்புகள் எவ்வளவு.

பதில்: நாங்கள் நல்லது செய்வதற்காக வந்திருக்கிறோம். அவதிப்படுகின்ற மக்களுக்கு சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு, தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்காக அரசு முயற்சி செய்கிறது, அதைப் பாராட்டுங்கள். 

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து  உபரிநீர் வீணாக வெளியில் செல்கிறது என்று முன்னாள் அமைச்சர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் குறிப்பிட்டார். நீர் வீணாகப் போகவில்லை, உபரிநீர் வெளியேறுவதற்காக தண்ணீர் திறந்தார்கள். மழை பெய்து 3,000, 4,000 கனஅடி தண்ணீர் வருகின்றபொழுது மரங்களும் அடித்துக் கொண்டு வருகின்றன.

தண்ணீர் திறந்துவிடும்பொழுது அதில் ஒரு கட்டை சிக்கிக் கொண்டது. அந்தக் கட்டை சிக்கியதால்தான் அந்த கசிவு ஏற்பட்டது . அந்தக் கட்டை அகற்றப்பட்டுவிட்ட பின், ஷட்டர் மூடப்பட்டது. இப்பொழுது, வருகின்ற நீரை சேமித்து வைத்து, ஏற்கனவே எவ்வளவு உயரம் நீர் இருந்ததோ, அதே அளவிற்கு தண்ணீர் தேக்கப்பட்டிருக்கிறது. இதில்கூட அரசியல் செய்ய விரும்புகிறார்கள்,

இது வேடிக்கையாக இருக்கிறது. அவர் ஒரு பழுத்த அரசியல்வாதி, நீண்டகாலம் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார் நீண்டகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். வேண்டுமென்றே ஒரு தவறான செய்தியை அவதூறான செய்தியைச் சொல்லி எப்படியாவது இந்த அரசின் மீது பழி சுமத்த வேண்டும். அந்த நிலை எல்லாம் மாறி, நல்ல ஆக்கப்பூர்வமான ஆலோசனையைச் சொல்லுங்கள்,

நிச்சயமாக எங்களுடைய அரசு கேட்கும். எங்களுடைய அரசைப் பொறுத்தவரை, ஒரு சொட்டுநீர் கூட வீணாகாமல் இருக்க வேண்டுமென்பதற்காகத் தான் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து