முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கட்டும் பொங்கல்: தங்கட்டும் இன்பங்கள்: இ.பி,எஸ்.-ஓ.பி.எஸ். வாழ்த்து

புதன்கிழமை, 13 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பொங்கல் திருநாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள பொங்கல் திருநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.  பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாள்! உழுது பயிரிட்டு வளர்த்துப் பாதுகாத்து, அறுவடை செய்து அனைவரும் வயிறார உண்ண உணவு தருபவன் ஏழை விவசாயி. அந்த விவசாயிகளின் வாழ்வு செழித்திட, கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டில் கூடுதல் மழை பொழிந்து, அம்மாவின் வழியில் நடைபெற்று வரும் கழக ஆட்சிக்குப் பெருமை சேர்த்துள்ளது இயற்கை!

சாதி, மத வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளைப் பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு, பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை, பொங்கல் பண்டிகை ஆகும்.  

உலகில் மக்கள் பல தொழில்கள் செய்து வந்தாலும், உழவுத் தொழிலே முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது. இத்தகைய பெருமைக்குரிய உழவர்களின் நலனை பேணிக் காத்திடவும், உழவர்களின் வருமானத்தைப் பெருக்கிடவும் பல்வேறு சீரிய திட்டங்களை அம்மாவின்  அரசு செயல்படுத்தி வருகிறது.  பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் இன்புற்று கொண்டாடி மகிழ்ந்திட, அம்மாவின் அரசு, பொங்கல் பரிசுத் தொகுப்பையும், 2,500 ரூபாய் ரொக்கத்தையும் தமிழக மக்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.  

அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்!  இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்! என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது வழியில், எங்கள் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக் கொள்கிறோம்.  இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து