மக்களுக்கு தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு வழங்காவிட்டால் டெல்லி அரசு வழங்கும்: கெஜ்ரிவால் அறிவிப்பு

புதன்கிழமை, 13 ஜனவரி 2021      இந்தியா
Arvind-Kejriwal 2020 11 05

Source: provided

புது டெல்லி : மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு வழங்காவிட்டால், டெல்லி அரசு வழங்கும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாமை வரும் 16-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக நாடு முழுவதும் 3 கோடி அளவில் மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது.  

இந்நிலையில், டெல்லியில் கொரோனா வைரசுக்கு எதிரான பணியில் இருந்து உயிரிழந்த மருத்துவர் ஹிதேஷ் குப்தா இல்லத்துக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றரார். டெல்லி அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளபடி, கொரோனா பணியில் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு ரூ. ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும் என்பதை உறுதி செய்யும் விதமாக ஒரு கோடிக்கான காசோலையை மருத்துவர் ஹிதேஸ் மனைவியிடம் கெஜ்ரிவால் வழங்கினார். 

அதன்பின் அங்கிருந்து முதல்வர் கெஜ்ரிவால் புறப்பட்டபோது, நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,  மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு வழங்கிட வேண்டும். அவ்வாறு மத்திய அரசு இலவசமாக வழங்காவிட்டால், தேவைப்படும் பட்சத்தில் டெல்லி மக்களுக்கு இலவசமாக டெல்லி அரசே வழங்கும்.  கொரோனா தடுப்பூசி குறித்து முழுமையாகத் தெரியாமல் யாரும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். கொரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை ஊக்கப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 

அந்த வகையில் இந்தப் பணியில் உயிரிழந்த மருத்துவர் ஹிதேஸ் குடும்பத்தாருக்கு டெல்லி அரசு கூறியபடி ரூ.ஒரு கோடி காசோலை வழங்கப்பட்டது. மருத்துவர் ஹிதேஸ் மனைவி நன்கு படித்தவர் என்பதால், அவருக்கு டெல்லி அரசு சார்பில் பணி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து