டெல்லி, ஜன. 26. பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பாகப் படித்து வரும் மாணவர்கள் 100 பேருக்கு, பிரதமர் மோடி அருகே அமர்ந்து குடியரசு தின விழாவைக் காணும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி அருகே அமர்ந்து அணிவகுப்பை ரசிக்க, சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வு மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 50 பள்ளி மாணவர்களும், 50 கல்லூரி மாணவர்களும் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கையெழுத்திட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. அத்துடன் கல்வித்துறை அமைச்சருடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை மத்தியக் கல்வி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை 600-ல் இருந்து 401 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு விருந்தினர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மாணவர்கள் குடியரசு தின விழாவை நேரலையில் காண மத்தியக் கல்வித்துறை அமைச்சகத்தால் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.