சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்பதே நமது லட்சியம்: நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி சூளுரை

புதன்கிழமை, 27 ஜனவரி 2021      தமிழகம்
EPS-2 2021 01 27

Source: provided

சென்னை : மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்பதே நமது லட்சியம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை மெரினா கடற்கரையில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

அம்மாவை நல்லடக்கம் செய்த இந்த இடத்தில் நினைவிடம் கட்டக்கூடாது என்று பினாமிகளை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். 

அவருடைய தந்தை கருணாநிதி இறந்தபோது இதே பகுதியில் அடக்கம் செய்யப்படுகின்ற நிலையில் அம்மாவை நல்லடக்கம் செய்த இடத்தில் நினைவகம் கட்டுவதை எதிர்த்து போடப்பட்ட வழக்குகளை இரவோடு இரவாக நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெற்றவர் இதே தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான்.

இதிலிருந்து எந்த அளவுக்கு அம்மாவுக்கு நினைவிடம் கட்டுவதை தடை செய்ய வேண்டும் என்ற தீய எண்ணம் கொண்டவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. 

இவர்களது பினாமிகள் வழக்குகளை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து ஸ்டாலினின் கபட நாடகத்தை உலகமே அறிந்துள்ளது இவரது சாயம் வெளுத்துள்ளது. இத்தகைய தீய எண்ணம் கொண்டவர் ஸ்டாலின்.

அம்மா சட்டமன்றத்தில், நூறாண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. கட்சியும் ஆட்சியும் தொடரும் என்றும், எவராலும் அழிக்க முடியாத எஃகு கோட்டையாகத் திகழும் என்றும் சூளுரைத்தார். அவருடைய சூளுரையை ஏற்று வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்போம், அதுதான் நம்முடைய லட்சியம், அதுதான் அம்மாவுக்கு நாம் செலுத்துகின்ற நன்றிக்கடன் என்பதை ஒவ்வொரு தொண்டனும் உணர வேண்டும்.

இரவு, பகல் பாராமல் பாடுபட வேண்டும். புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த திட்டங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மீண்டும் அம்மா சொல்லிய லட்சிய வார்த்தைகளுக்கிணங்க, அம்மாவுடைய ஆட்சியை அமைத்து, அம்மாவுடைய இதே நினைவு மண்டபத்தில் நாம் அனைவரும் நன்றி செலுத்துவதற்கு வீர சபதம் ஏற்போம்.

அம்மாவின் நினைவிடத்தை உலகமே வியக்கும் வண்ணம் சிறப்பான முறையில் வரலாற்றில் இடம்பெறும் வகையில் அமைப்பதற்கு தங்கள் உழைப்பை அளித்த பொதுப்பணித் துறை மற்றும் செய்தித் துறை அலுவலர்கள், பணியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இதற்காக உழைத்த அனைவரையும் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன்.

அம்மாவினுடைய நினைவிட நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு வந்து, இந்த நிகழ்ச்சியிலே பங்குபெற்று வாகனங்களில் வீடு திரும்புகின்ற அத்தனை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து