திரிணாமுல் காங்., வேட்பாளர்கள் மீது பா.ஜ.கவினர் தாக்குதல்: மம்தா

செவ்வாய்க்கிழமை, 6 ஏப்ரல் 2021      இந்தியா
Mamta 2020 12 14

Source: provided

கொல்கத்தா : திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை பா.ஜ.க தாக்குவதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நேற்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக நேற்று அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

அசாமில் நேற்று 3-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 3-வது கட்டமாக நேற்று 31 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் வன்முறை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் 8 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

இருப்பினும், சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மேற்கு வங்க மாநிலம் அரம்பாக் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் சுஜாதா மோண்டால் கான் போட்டியிடுகிறார். அரம்பாக் தொகுதியிலுள்ள அரண்டி பகுதியிலுள்ள வாக்குச் சாவடிக்குச் சென்ற சுஜாதா மோண்டால் கானை பா.ஜ.கவினர் விரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து தெரிவித்த சுஜாதா மோண்டால், ‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவானவர்களை பா.ஜ.கவினர் மிரட்டியுள்ளனர். அரண்டி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை பா.ஜ.கவினர் தாக்கினர். வன்முறையைத் தூண்டுவதன் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என்று பா.ஜ.கவினர் தவறாக எண்ணுகின்றனர். சாவுக்கு பயப்படாத ஆள் நான்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அலிபுர்துவர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘நம்முடைய பட்டியலின வேட்பாளர் சுஜாதா, வாக்குச் சாவடிக்கு சென்றபோது அவர் மீது பா.ஜ.கவினர் வன்முறையை ஏவியுள்ளனர்.

கானாகுல் பகுதியில் மற்றொரு வேட்பாளரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். கிழக்கு கேனிங் பகுதியில் நம்முடைய வேட்பாளர் ஷவுகட் மோல்லா வாக்குச் சாவடிக்குள் செல்வதை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்துள்ளனர். மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதியில் நம்முடைய கட்சி உறுப்பினர்கள் மீது வன்முறைச் சம்பவம் நடைபெற்றுள்ளது’ என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து