2-வது டோஸ் செலுத்தி கொண்டார் பிரதமர் மோடி

வியாழக்கிழமை, 8 ஏப்ரல் 2021      இந்தியா
modi-vaccin-2021-04-08

தகுதி பெற்ற அனைவரும் உங்களுக்கான தடுப்பூசியை விரைவில் எடுத்துக் கொள்ளுங்கள்  என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடியே 29 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டின் பல பகுதிகளில் கடந்த மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதை கொரோனாவின் 2-வது அலை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் மகராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 2-வது அலை வந்து விட்டதற்கான அறிகுறி இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும், பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தடுப்பூசியின் முதல் கட்ட பயன்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 14-ம் தேதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள், முன்கள பணியாளர்கள், 65 வயதுக்கு மேற்பட்டோருக்கும், அதைத் தொடர்ந்து 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். 

பிரதமர் மோடி கடந்த மார்ச் 1-ம் தேதி பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.  இந்தநிலையில் 37 நாட்களுக்கு பிறகு மோடி 2-வது டோஸ் தடுப்பூசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று எடுத்துக்கொண்டார்.  இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) இன்று(நேற்று) காலை 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன்.  கொரோனா வைரசை தோற்கடிப்பதற்கான வழிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் ஒன்று. தகுதி பெற்ற அனைவரும் உங்களுக்கான தடுப்பூசியை விரைவில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் 2 நர்சுகள் ஈடுபட்டனர். அவர்களில் புதுச்சேரியை சேர்ந்த பி.நிவேதா மற்றும் பஞ்சாபை சேர்ந்த நிஷா சர்மா ஆவார்கள். இதில் நிவேதா ஏற்கனவே பிரதமர் மோடிக்கு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தியவர் ஆவார்.  பஞ்சாபை சேர்ந்த நர்சு நிஷாசர்மா கூறும் போது, 

கோவேக்சின் 2-வது டோசை பிரதமர் நரேந்திர மோடிக்கு செலுத்தினேன். அவர் எங்களிடம் பேசினார். அவரை சந்தித்து அவருக்கு தடுப்பூசி செலுத்தியது எனக்கு ஒரு மறக்க முடியாது தருணம் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து