நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா

வியாழக்கிழமை, 8 ஏப்ரல் 2021      தமிழகம்
tirunelveli-2021-04-08

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை செந்தமிழ்நகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள், 3 சிறுவர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில், நெல்லை பேட்டை செந்தமிழ்நகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில் நேற்று மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சுகாதரப் பணியாளர்கள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டோர் அனைவரும் தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இத்தனை பேருக்கு தொற்று ஏற்பட்டது எப்படி என்பதை கண்டுபிடிக்க தொடர்பு கண்டறியும் (Contract Tracing) பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையில், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின்படி மாநகர நல அலுவலர் டாக்டர். சரோஜா ஆலோசனையின் படி மாநகரப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.  பேருந்துகள், ஆட்டோக்கள், ஏ.டி.எம்.,கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பாளையங்கோட்டைப் பகுதிகளில் உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து