தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

CM-1 2021 07 28

Source: provided

சென்னை : தனியார் மருத்துவமனைகளில் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் சேவையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை, காவேரி மருத்துவமனையில், இந்திய தொழிற் கூட்டமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கூட்டாண்மை சமூகப் பங்களிப்பு நிதியின் மூலம் நடத்தும் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் சேவையினைத் தொடங்கி வைத்தார். மேலும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, முதல்வரிடம், இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிக்கு இந்திய தொழிற் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் சந்திரகுமார், இந்திய தொழிற் கூட்டமைப்பின் கூட்டாண்மை சமூகப் பங்களிப்பு நிதியிலிருந்து 2 கோடியே 20 லட்சம்  ரூபாய்க்கான காசோலையையும், அடையாறு ஆனந்தபவன் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.டி. சீனிவாச ராஜா 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்கள்.  

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாகப் பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளும் அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் இதுவரை அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களின் மூலம் 2,15,17,446 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் என்.எழிலன் மற்றும் வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  முதன்மைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் மரு. உமா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) மரு. எஸ். மனீஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு. செல்வவிநாயகம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து