கொரோனாவுக்கு எறும்பு சட்னி: சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி

Supreme-Court 2021 07 19

சிவப்பு எறும்பினால் தயாரான சட்னி, கொரோனாவை குணப்படுத்தும் எனக்கூறி, அதை பயன்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 

ஒடிசாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த நயாதர் பாதியால் என்பவர் ஒடிசா ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார். அதில், ஒடிசா, சத்தீஸ்கர் மாநில பழங்குடி இன மக்கள் சளி, இருமல், மூச்சு திணறல் போன்ற பிரச்னைகளுக்கு, சிவப்பு எறும்பு மற்றும் பச்சை மிளகாய் கலந்து செய்த சட்னியை உண்பது வழக்கம். இது மருந்தாக கருதப்படுகிறது. இதில் பார்மிக் அமிலம், புரதம், கால்சியம்,  விட்டமின் - பி12, ஸின்க் உள்ளிட்டவை உள்ளன. இது கொரோனாவை குணப்படுத்த சிறந்த மருந்தாக அமையும் என்று கூறப்பட்டிருந்தது. 

மனுவை விசாரித்த ஐகோர்ட், இது தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் ஆகிவற்றை நாடும்படி உத்தரவிட்டது. இவரது கோரிக்கையை இரண்டு அமைப்புகளும் நிராகரித்தன. 

இதையடுத்து, மனுதாரர் மீண்டும் ஐகோர்ட்டை நாடினார். அப்போதும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், 

 

மனுதாரர் கூறுவது போல் பாரம்பரியமான மருத்துவம், வீட்டு வைத்தியம் உள்ளிட்டவை நம் நாட்டில் ஏராளமாக உள்ளன. அவற்றை தனிநபர் தனிப்பட்ட முறையில் செய்து பார்க்கலாம். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவரே முழு பொறுப்பாளியாகிறார். அப்படிப்பட்ட மருத்துவ முறைகளை நாடு முழுதும் உள்ள அனைவரும் பின்பற்ற உத்தரவிட முடியாது. மனுதாரர் உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அதுவே சிறந்த வழி. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து