வக்கீல்களின் உயிர் மட்டும் உயர்வானது அல்ல: ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Supreme-Court 2021 07 19

கொரோனா பாதித்து உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

வழக்கறிஞர் பிரதீப் குமார் யாதவ் என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,'கொரோனா நோய் தொற்றால் பாதிப்படைந்து சுமார் 60 வயதிற்கு குறைவாக உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடுவழங்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு மற்றும் மாநில வழக்கறிஞர்கள் பார் அசோசியேஷன் ஆகியோருக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் மேற்கண்ட மனு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,'நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் வழக்கறிஞர்களின் உயிர் என்பது மட்டும் மற்ற மனித உயிர்களை விட உயர்வானது கிடையாது. வழக்கறிஞர்கள் கருப்பு கோட்டு அணிந்து இருப்பதால் அவர்களின் உயிர் மிகவும் விலைமதிப்பற்றது என்று அர்த்தம் இல்லை. வழக்கறிஞர்களுக்கு என சிறப்பாக நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட முடியாது. இது பொதுநல மனு போன்று தெரியவில்லை. விளம்பரத்திற்காகவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மனுதாரரான வழக்கறிஞருக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கிறோம், மனுவையும் தள்ளுபடி செய்கிறோம் எனத் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து