முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்: தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி பதவியேற்றார்: அரசியல் அமைப்புக்குட்பட்டு செயல்படுவேன் என பேட்டி

சனிக்கிழமை, 18 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தின் புதிய கவர்னராக  ஆர்.என்.ரவி நேற்று பதவியேற்றார். அவருக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித், சமீபத்தில் பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து நாகாலாந்து மாநில கவர்னராக இருந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான, ரவீந்திர நாராயண ரவியை தமிழக கவர்னராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார். பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோகித், சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து விடைபெற்றுச் சென்றார். 

இதைத் தொடர்ந்து, புதிய கவர்னராக ஆர்.என்.ரவி, கடந்த வியாழக் கிழமை இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் வரவேற்றனர். விமான நிலைய வளாகத்திலேயே கவர்னருடன் முதல்வர் சிறிது நேரம் உரையாடினார். அதன்பிறகு ஆர்.என்.ரவி கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு தமிழக காவல் துறையின் குதிரைப்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதன் பிறகு அவர் கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கினார்.

நேற்று காலை 10.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் தர்பார் மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி புல்வெளி அரங்கில் ஆர்.என்.ரவி பதவி ஏற்கும் விழா நடந்தது. இதற்காக புல்வெளி அரங்கில் பந்தல் அமைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.  கவர்னர் பதவி ஏற்பு விழாவுக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், முன்னாள் அதிகாரிகள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருந்தது. முக்கிய பிரமுகர்கள் 10 மணி முதல் விழா அரங்குக்கு வர தொடங்கினார்கள்.

10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் ஆர்.என்.ரவியை அழைத்து வந்தனர். விழா மேடையில் ஆர்.என்.ரவி, அவரது மனைவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் அமர்ந்து இருந்தனர். இதையடுத்து 10.33 மணிக்கு காவல்துறையின் இசைக்குழு இசைத்த தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது.

தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் தலைமை செயலாளர் இறையன்பு, “இந்திய அரசியலமைப்பு சட்டப்படி தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற குறிப்பை வாசித்தார். 

இதைத் தொடர்ந்து அவர் புதிய கவர்னராக ஆர்.என்.ரவியை பதவி ஏற்க வரும்படி அழைத்தார். 10.35 மணிக்கு தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றுக்கொண்டார். தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணத்தை வாசிக்க வாசிக்க அதையே ஆர்.என்.ரவி வாசித்து பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் ஆர்.என்.ரவியும், சஞ்சீவ் பானர்ஜியும் கோப்புகளில் கையெழுத்திட்டனர்.  பதவி ஏற்பு முடிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கைகுலுக்கி வணக்கம் செலுத்தி வாழ்த்து தெரிவித்தார்.

ஆர்.என்.ரவியின் மனைவிக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடையை பரிசாக வழங்கினார்.  கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகம் பரிசு வழங்கி வாழ்த்தினார். ஆர்.என்.ரவியின் மனைவிக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடையை பரிசாக வழங்கினார். தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மலர் கொத்துகளை ஆர்.என்.ரவிக்கும், அவரது மனைவிக்கும் வழங்கினார். 

இதையடுத்து பெண்கள் தேசிய கீதம் பாடினார்கள். அத்துடன் புதிய கவர்னர் பதவி ஏற்பு விழா நிறைவு பெற்றது. 10 நிமிடங்களில் மிக எளிமையாக விழா நடைபெற்று முடிந்தது

இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 

நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலின் கவர்னருக்கு புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதேபோன்று, அமைச்சர்களும் புத்தகங்கள், சால்வைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, கவர்னர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வணக்கம் எனத் தமிழில் கூறி செய்தியாளர்கள் சந்திப்பைத் தொடங்கினார்.  பின்னர் அவர் கூறியதாவது:

மிகவும் பழமையான கலாச்சாரம் கொண்ட பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் கவர்னராக பொறுப்பேற்றதற்குப் பெருமைப்படுகிறேன். அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு உழைப்பேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழகத்தில் உள்ளது. கவர்னர் பதவி என்பது விதிகளுக்கு உட்பட்டது. அதற்கேற்பச் செயல்படுவேன்.  அரசின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளதால் என்னுடைய பொறுப்பைச் சிறப்பாகச் செய்வேன். என்னால் இயன்ற அளவு தமிழக மக்களுக்கு சேவையாற்றுவேன். தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளவும் நான் முயற்சி செய்ய இருக்கிறேன். 

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இணைந்து பணியாற்றுவது அவசியம். தமிழக அரசு கொரோனாவைச் சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தியுள்ளது. தமிழக அரசின் ஒட்டுமொத்தச் செயல்பாடு குறித்துக் கூறுவதற்கு சில காலம் அவகாசம் தேவை.  இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

முன்னதாக தமிழகத்தின் புதிய கவர்னருக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  தமிழக கவர்னராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். சிறந்த வரலாறு மற்றும் உயர்ந்த பாரம்பரியம் கொண்ட எங்களது புகழ் பெற்ற மாநிலத்துக்கு கவர்னராக வந்துள்ள தங்களை அ.தி.மு.க. சார்பில் மனதார வரவேற்கிறேன். தங்கள் உதவியால் தமிழ்நாடு உயர்நிலைக்கு செல்லும். தங்கள் பதவி ஏற்பு விழாவில் நான் பங்கேற்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இன்னும் சில தினங்களில் சென்னை திரும்பியதும் தங்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து