முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக் கோப்பையுடன் விலகுகிறார்: அனைத்தையும் சாதித்துவிட்டதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி

சனிக்கிழமை, 18 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

டி-20 உலகக் கோப்பையுடன் விலக எண்ணுவதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும், தான் நினைத்ததையெல்லாம் சாதித்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.

2014-ல் இந்திய அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார் முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி. 2017-ல் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச்சுற்றில் இந்திய அணி தோற்ற பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். சாஸ்திரி பயிற்சியாளராக உள்ள இந்த 5 வருடங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு இருமுறை சென்று டெஸ்ட் தொடரை வென்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றது. இங்கிலாந்தில் சமீபத்தில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகித்தது.

உலகக் கோப்பையுடன்...

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம், டி-20 உலகக் கோப்பையுடன் முடிவடையவுள்ளது. டி-20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவுள்ளார் ரவி சாஸ்திரி. இதுகுறித்த தனது எண்ணங்களை கார்டியன் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சாதித்துவிட்டேன்...

உலகக் கோப்பையுடன் விலகவேண்டும் என நினைக்கிறேன். நான் நினைத்த அனைத்தையும் சாதித்துவிட்டேன். 5 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நெ. 1 அணி, ஆஸ்திரேலியாவில் இருமுறை டெஸ்ட் தொடர்களின் வெற்றிகள், இங்கிலாந்தில் பெற்ற வெற்றிகள். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அனைத்து நாடுகளையும் அவர்கள் மண்ணில் தோற்கடித்தது... இதற்கு மேல் எதுவுமில்லை. டி-20 உலகக் கோப்பையும் வெற்றி பெற்றால் மேலும் சிறப்பு. ஒன்றை நான் நம்புகிறேன் - கூடுதல் வரவேற்பினால் அதிக நாள்கள் தங்கக்கூடாது. 

 

இந்திய அணியில் நான் சாதிக்க நினைத்ததை விடவும் கூடுதலாகச் சாதித்துவிட்டேன். இது முடிவுபெறுகிறது என்பதில் வருத்தம் தான். அற்புதமான வீரர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஓய்வறையில் அருமையாக நேரங்களைக் கழித்தோம். நாங்கள் வெளிப்படுத்திய தரமும் ஆட்ட முடிவுகளும் அற்புதமான பயணமாக அமைந்துவிட்டது என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து