முக்கிய செய்திகள்

இந்தியாவில் பெண்கள் கருவுறும் விகிதம் சரிவு ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      இந்தியா
India-female--2021-11-25

இந்தியாவில் கருவுறும் விகிதம் முதன்முறையாக வழக்கமான அளவுக்கும் கீழே சென்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 2050ம் ஆண்டு காலகட்டத்தில் இன்னும் 23 கோடி மக்கள் அதிகமாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.இதனிடையே, இந்திய அரசாங்கம் பல காலமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்த போராடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலகிலேயே முன்னோடியாக 1952 ஆம் ஆண்டில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்தியா. 

2027ம் ஆண்டில் உலகின் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால், 1950ம் ஆண்டு காலகட்டத்தில் 5.9 இருந்த கருவுறும் விகிதம், இன்று 2.0 குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.இந்த  விஷயம் சற்று  முரண்பாடாக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கருவுறும் விகிதம் முதன்முறையாக வழக்கமான அளவுக்கும் கீழே சென்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2019-2021ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல ஆய்வு (என்.எச்.எப்.எஸ்), அருணாச்சலப்பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கார், அரியானா, ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், டெல்லி, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டது.

நவீன கருத்தடை முறைகள் அதிகம் பயன்பாட்டில் இருப்பதால் வழக்கமான அளவுக்கும் கீழே சென்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஆய்வின் மூலம் வெளிவந்துள்ள தகவல்கள் வருமாறு., நாட்டின் மொத்த கருவுறும் விகிதம் 2.2விலிருந்து 2.0ஆக சரிந்துள்ளது. மிகக்குறைந்த அளவாக சண்டிகர் மாநிலத்தில் 1.4 ஆகவும் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 2.4 ஆகவும் உள்ளது. கருத்தடை பரவல் விகிதம் 54 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் பிரசவம் நடக்கும் விகிதம் 79 சதவீதத்தில் இருந்து 89 சதவீதமாக அதிகரித்துள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழகம் 100 சதவீதத்துடன் முன்னிலை வகிக்கிறது. 12-23 மாதக் குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பூசிகள் செலுத்தும் விகிதத்தில் ஒடிசா மாநிலம் 90 சதவீதம் செலுத்தி முன்னிலை வகிக்கிறது.3.1 சதவீத திருமணமான பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். 1.5 சதவீத இளம்பெண்கள்(18-29 வயது) உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். 6 மாதக் கைக்குழந்தைகளுக்கு பாலூட்டும் விகிதம் 55 சதவீதத்திலிருந்து 64 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இரத்தசோகை பாதிப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. கருவுற்ற தாய்மார்களுக்கு 6 மாதத்திற்கு இரும்புச்சத்து மாத்திரைகள் சீராக விநியோகிக்கப்பட்டு வந்த நிலையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் 100 பேரில் 50 பேருக்கு இரத்த சோகை பாதிப்பு உள்ளது. என அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து