முக்கிய செய்திகள்

நெருக்கடியில் இந்திய வீரர்கள்: இன்சமாம் உல் ஹக் விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      விளையாட்டு
Inzamam-ul-Haq 2021 11 26

Source: provided

டி-20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி அடைந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது., டாஸ் போடுவதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமும் வரும்போதிருந்தே, போட்டியை நடத்துவோர் நெருக்கடியில் இருப்பது தெரிந்தது.

என்னைப் பொருத்தவரை இந்தியர்கள் போட்டி தொடங்கும் முன்பிருந்தே பதற்றத்திலும், பயத்திலும் இருக்கிறார்கள். அவர்களின் உடல்மொழி, குறிப்பாக விராட் கோலியின் உடல்மொழியை டாஸ் போடும் பார்த்தால் அவர் பதற்றத்தில் இருந்தது தெரிந்தது. ஆனால், இந்திய வீரர்களின் உடல்மொழியோடு ஒப்பிடுகையில் பாகிஸ்தான் வீரர்கள் தன்னம்பிக்கையுடன் இருந்தனர். ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபின்புகூட இந்திய அணி பதற்றத்தில் இல்லை எனக் கூறமுடியாது. ரோஹித் சர்மாவே நெருக்கடியில்தான் பேட்டிங் செய்தார். போட்டி தொடங்கும் முன்பிருந்தே இந்திய வீரர்கள் நெருக்கடியில் பதற்றத்தில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது என்றார்.

_____________

அனைத்து வித போட்டியிலிருந்தும் விலகினார் ஆஸி. வீரர் டிம் பெயின்

பாலியல் புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெயின், காலவரையற்று அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்தமாதம் தொடங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் தொடரிலும் டிம் பெயின் விளையாடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் டிம் பெயின் தன்னுடன் பணியாற்றும் டாஸ்மானிய கிரிக்கெட் அமைப்பின் சக பெண் ஊழியருக்கு மோசமான பாலியல் குறுஞ்செய்திகள், புகைப்படங்களை அனுப்பியது குறித்த விவரங்கள் வெளியாகி இருப்பதால் கேப்டன் பதிவியிலிருந்து டிம் பெயின் விலகினார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக கடும் விரக்தியில் உள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

____________

ஆஸி. அணியின் கேப்டனாக ' பாட் கம்மின்ஸ் ' நியமனம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார், துணைக் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பந்தைச்சேதப்படுத்திய விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு கேப்டன் பதவியை இழந்த ஸ்டீவ் ஸ்மித், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் மீண்டும் அதிகாரபூர்வ பதவியை பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படுவது 65 ஆண்டுகளில்இதுதான் முதல்முறையாகும். கடைசியாக கடந்த 1956ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் ரே லிண்ட்வால் கேப்டனாக இருந்தார். அதன்பின் வேகப்பந்துவீச்சாளர் யாரும் கேப்டனாக நியமிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

___________

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: கனடாவை பந்தாடியது இந்தியா

12-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. வருகிற 5-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜெர்மனி, பெல்ஜியம், பாகிஸ்தான் உள்பட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் பி பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பிரான்சை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 4-5 என்ற கணக்கில் பிரான்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

இந்நிலையில், பி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா, கனடா அணிகள் மோதின. முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனால் முதல் பாதியி இந்தியா 4-1 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் இந்தியாவின் ஆக்ரோஷம் தொடர்ந்தது. இந்திய வீரர்கள் சஞ்சய், அராய்ஜித் சிங் ஹாட்ரிக் கோல் அடித்தனர்.  இறுதியில், இந்தியா 13-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

______________

என்னால் தூங்கவே முடியவில்லை: உணர்ச்சிவசப்பட்ட ஷ்ரேயாஸ் 

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயரும் நியூசி. அணியில் ரச்சின் ரவீந்திராவும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்கள். 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 111.1 ஓவர்களில் 345 ரன்கள் எடுத்தது. அறிமுக டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர், 157 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் சதமடித்தார். சதமடித்தது பற்றி ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது., முதல் நாளில் இருந்து நடந்த அனைத்திற்கும் மகிழ்ச்சியாக உள்ளேன். நேற்றிரவு நன்கு தூங்குவேன் என எதிர்பார்த்தேன். ஆனால் என்னால் தூங்கவே முடியவில்லை. கவாஸ்கர், அறிமுக டெஸ்டுக்கான தொப்பியை எனக்கு வழங்கினார். அவர் மிகவும் ஊக்கம் அளித்தார். சதமடித்தது நிறைவைத் தந்தது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து