முக்கிய செய்திகள்

நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை : பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      இந்தியா
Modi 2021 11 02

Source: provided

புது டெல்லி : கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை என்றும், ஓமிக்ரான் வைரஸ் குறித்து நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மனதின் குரல் எனப்படும் மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது-

இன்னும் 2 நாட்களில் டிசம்பர் மாதம் வந்து விடும். 1971-ல் நடந்த போரின்போது நாம் பாகிஸ்தானை வீழ்த்தினோம். அதன் பொன்விழா ஆண்டு அடுத்த மாதம் 16-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் நினைவை நான் போற்றுகிறேன்.

இந்தியாவுக்காகவும், சமூகத்திற்காகவும் அம்பேத்கர் தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார். அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதில் அவருடைய பங்களிப்பு மகத்தானது. இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பை உணர்ந்து, கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக ஓயவில்லை என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுமக்கள் மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை கைவிடக் கூடாது. இவ்வாறு மோடி பேசினார். 

உலக நாடுகளில் தற்போது ஓமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் மோடி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்கா, நமீபியா, போத்ஸ்வானா உள்ளிட்ட தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் சென்ற வகையில் ஹாங்காங், ஐரோப்பிய நாடுகளிலும் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார். இருப்பினும் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. முன்பை விட சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து