முக்கிய செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவுதால் விழிப்புடன் இருக்க வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை வேண்டுகோள்

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      இந்தியா
omicron-2021-12-02

ஒமைக்ரான் வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவுதால் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.,

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இருவரும் வெளிநாட்டினர் ஆவர். அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்டறியப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா தடுப்பு நடைமுறை பின்பற்றப்படும்.

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன; கடுமையான அறிகுறிகள் இல்லை. ஒமைக்ரான் அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம். தொற்று உறுதியானால் அடுத்தகட்ட சிகிச்சை, இல்லையெனில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். 

உலகம் முழுவதும் இதுவரை 29 நாடுகளில் இதுவரை 373 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமைக்ரான் வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது. ஒமைக்ரான் கொரோனாவை கண்டு அச்சப்படவேண்டாம். அதேவேளை விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து