முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் சிறை பிடிக்கப்பட்ட நான்கு பேர் பத்திரமாக மீட்பு

திங்கட்கிழமை, 17 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

மெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூதர்கள் வழிபாட்டு தலத்தில், பிணை கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட நால்வரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் காலிவில் என்ற இடத்தில், யூதர்களின் வழிபாட்டு தலமான பெத் இஸ்ரேல் கோவில் உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை புகுந்த மர்ம நபர், கோவிலின் மத குரு மற்றும் வழிபாடு செய்ய வந்த மூவரை பிணை கைதிகளாக பிடித்து வைத்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. பிணை கைதிகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியான ஆபியா சித்திக்கை சிறையில் இருந்து விடுவித்தால் மட்டுமே பிணையில் உள்ளவர்கள் விடுவிக்கப்படுவர் என அந்த மர்ம நபர் மிரட்டல் விடுத்தார். 

அமெரிக்க ராணுவ அதிகாரிகளை ஆப்கானிஸ்தானில் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக, ஆபியா சித்திக் என்பவர் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸில் உள்ள போர்டு வொர்த் பெடரல் மெடிக்கல் சென்டர் சிறையில் அவர் தற்போது அடைக்கப்பட்டு உள்ளார். இவரை விடுவிக்கும்படி மிரட்டல் விடுத்த நபர், அவரது சகோதரராக இருக்கலாம் என முதலில் சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர் ஹூஸ்டன் நகரில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிணை கைதிகளை மீட்க போலீசார் கடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எட்டு மணி நேர போராட்டத்துக்கு பின், ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டார். அவர் உடலில் காயம் எதுவும் இல்லை. அதன் பின், அதிரடிப் படையினர் கோவிலுக்குள் அதிரடியாக புகுந்து மர்ம நபரை சுட்டு, மீதமுள்ள மூன்று பிணை கைதிகளை பத்திரமாக மீட்டனர். இதன் வாயிலாக, 12 மணி நேரத்திற்கும் மேலாக நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. மர்ம நபர் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து