முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் வளர்ச்சி சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்: திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தின் வளர்ச்சி சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். 

தமிழக முதல்வரும், மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை, சேப்பாக்கம், எழிலகம், மாநிலத் திட்டக்குழு அலுவலகத்தில் துறை சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, 

புதிய அரசு பொறுப்பேற்றதும் மாநில திட்டக் குழுவை புதிதாக அமைத்தோம். உங்களது பணி என்பது மிகமிக முக்கியமானது. மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவைச் சார்ந்த நீங்கள் அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளைச் சொல்கிறீர்கள். உங்களிடம் இருந்து வரும் எண்ணங்கள் ஆலோசனைகளாக மட்டுமில்லாமல், அந்த எண்ணம் குறித்த முழுமையான செயல் வடிவமாக எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

புதிய புதிய எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றலாம். அந்த எண்ணம் குறித்து அது பற்றிய வல்லுநர் குழுவுடன் நீங்களே ஆலோசனை நடத்தலாம். அவற்றை மேம்படுத்த அதனை அரசுக்கு உங்களது திட்ட அறிக்கையாக நீங்கள் வழங்கலாம். மிக முக்கியமான ஆலோசனையாக இருந்தால் அது குறித்த முழுமையான பரிசீலனைக்குப் பிறகு நீங்கள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

தமிழகம் பல்வேறு வகைகளில் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. அது நமக்கு பெருமை தருவதாகும். வளர்ச்சித் திட்டங்களையும் சமூக சீர்திருத்தத்தையும் இணைத்ததால் நம் மாநிலம் அடைந்த மாபெரும் பலன் அது. அதே நேரத்தில் முழுமையாக முன்னேற்றத்தை அடையத் தேவையானவை குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும்.

மனிதவள மேம்பாடு, வாழ்க்கைத் தரம், மனித வாழ்க்கையின் ஆயுள், கல்வி கற்றல், குழந்தைகள் வளர்ப்பு, வறுமை ஒழிப்பு, மக்கள் நலவாழ்வு, மனித உரிமைகள், சமூகநீதி, விளிம்பு நிலை மக்கள் என இப்படி அனைத்து தரப்புகளிலும் நாம் மேம்பட்டவர்களாக மாற வேண்டும். இத்தகைய குறியீடுகளை தமிழகத்தில் மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முனைப்போடு இருக்கிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து நீங்கள் அரசுக்கு வழங்க வேண்டும். 

அனைத்து மாவட்டங்களுக்குமான முழுமையான வேலைத் திட்டம், தொழில் வளர்ச்சியில் மாவட்டத்துக்கு மாவட்டம் வேற்றுமை உள்ளது. அதே போல் கல்வியிலும் மாறுபாடு இருக்கிறது. சில மாவட்டத்தில் வறுமை குறைவாகவும், சில மாவட்டங்களில் அதிகமாக இருப்பதை நாம் கண்கிறோம். இந்த வேறுபாட்டையும் மாறுபாட்டையும் களைய தமிழகம் முழுமைக்குமான சமச்சீரான ஒரு வேலைத் திட்டம் தேவை. இந்த சமச்சீரான வளர்ச்சிக்கான பயணத்தை நாம் உடனடியாக தொடங்கியாக வேண்டும்.  

எத்தனையோ நல்ல பல திட்டங்களை வகுக்கிறோம். அத்தகைய திட்டமானது  அடித்தட்டு மக்களைச் சென்றடைந்து விட்டதா என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும். உரிய பலனைக் கொடுத்துள்ளதா என்பதை கள ஆய்வு மூலமாக நீங்கள் கண்காணித்து எங்களுக்குச் சொல்ல வேண்டும். அதனை கண்காணிப்பவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.

தமிழகத்தின் நிதி நெருக்கடியை நான் சொல்லத் தேவையில்லை. அநாவசியச் செலவுகளைக் குறைப்பது குறித்த ஆலோசனைகள் தேவை.  நிதி திரட்டுதல் என்பது முக்கியமாக வரிவசூல், பத்திரப்பதிவு, ஆயத்தீர்வை ஆகியவற்றையும் தாண்டி சுற்றுலா, சிறுகுறு தொழில்கள்,  கைவினைப் பொருள்கள், கைத்தறி போன்ற துறைகளின் மூலமாகவும் வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

தொழில் உருவாக்கம் என்பது நிதி உருவாக்கமாகவும், வேலைவாய்ப்பு பெருக்கமாகவும் மாற வேண்டும். கிராமப்புற மேம்பாடு குறித்து அக்கறையோடு நீங்கள் சிந்திக்க வேண்டும். இப்படி எத்தனையோ வகைகளை நீங்கள் சிந்தித்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதற்கு உங்களது வழிகாட்டுதல்கள் தேவை. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து