முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் பத்ம விருதை புறக்கணித்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 2 பிரபலங்கள்!

புதன்கிழமை, 26 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மத்திய அரசின் பத்ம விருதை மேற்கு வங்கத்தை சேர்ந்த 2 பிரபலங்கள் புறக்கணித்துள்ளனர். மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மேற்கு வங்காள மாநில பிரபல பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியும் புறக்கணித்துள்ளனர்.

2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதை நிராகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் கூறியிருப்பதாவது: எனக்கு பத்ம பூஷண் விருது பற்றி எதுவும் தெரியாது. என்னிடம் யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் எனக்குக் கொடுத்திருந்தால் நான் அதனை நிராகரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் மிகக் கடுமையான விமர்சகர்களுள் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் ஒருவர். 77 வயதான அவர் தற்போது உடல்நிலைக் குறைவு காரணமாக வயது சார்ந்த பிரச்சினைகளால் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.

புத்ததேவ் பட்டாச்சார்யாவை தொடர்ந்து மேற்கு வங்காள மாநில பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியும் விருதை புறக்கணித்துள்ளார். இது குறித்து அவரது மகள் சவுமி சென் குப்தா கூறியதாவது.,

90 வயதில் விருது வழங்குவது தன்னை அவமதிப்பது போல இருப்பதாக சந்தியா முகர்ஜி கூறினார். பத்ம விருதுகள் போன்றவை இளம் வயதில் உள்ள கலைஞர்களுக்கு கிடைக்க வேண்டியது. அதனால் இந்த விருதுகளை நிராகரிக்கிறார்.  இந்த விருதை நிராகரிப்பதில் எந்தவித அரசியல் பின்புலமும் இல்லை. காலம் கடந்து சாதனை படைத்த கலைஞர்களை கௌரவிப்பதை எதிர்க்கவே இந்த விருதை பெற மறுக்கிறார். இவ்வாறு சவுமி சென் குப்தா கூறினார்.

இதற்கு முன் நிராகரித்தவர்கள்: 

சினிமா கதாசிரியர் சலீம் கான் கடந்த 2015 ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை நிராகரித்தார். 2005 ஆம் ஆண்டு வரலாற்று ஆராய்ச்சியாளர் ரோமிலா தாப்பார் தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம் பூஷண் விருதை நிராகரித்தார். 1974ல் அவருக்கு அளிக்கப்பட்ட விருதை இந்திய ராணுவ சீக்கியக் கோயிலில் நடத்திய தாக்குதலைக் கண்டித்து 1984ல் அவ்விருதை திருப்பியளித்தார். குஷ்வந்த் சிங், 1974ல் வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை 1984ல் நிராகரித்தார். இருப்பினும் 2007ல் வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து