முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் அருகே கட்டிடம் இடிந்து பலியான 2 மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

கடலூர் அருகே கட்டிடம் இடிந்து விழந்த விபத்தில் பலியான 2 பள்ளி மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் நிதி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த மேலும், ஒரு மாணவனுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் அருகே எஸ். புதூர் வண்டிக்குப்பம் பகுதியில் பழமைவாய்ந்த இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த கட்டிடத்தில் யாரும் வசிக்காததால் கட்டிடம் மோசமடைந்து நிலையில் காணப்பட்டது. இன்று  இந்த வீடுகளுக்கு அருகில் எஸ்.புதூரை சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் வீரசேகர், சுதீஸ்குமார் புவனேஸ்வரன் மற்றும் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கட்டிடம் இடிந்து விழுந்தது. 

இதில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வீரசேகர், சுதீஷ்குமார் 2 பேரும் உயிரிழந்தனர்.  வனேஸ்வரனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, கடலூர் கட்டிட விபத்தில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், கடலூர் மாவட்டம் ராமாபுரம் கிராமத்திலுள்ள பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் வீரசேகர் மற்றும் சதிஷ் என்ற சிறுவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் புவனேஷின் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐம்பதாயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து