முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துக்கள் விவரம் அடங்கிய புத்தகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      தமிழகம்
CM-3 2022-05-17

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துக்கள் விவரம் அடங்கிய புத்தகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெற்றுக் கொண்டார். 

நமது பண்பாட்டுச் சின்னங்களாக விளங்கும் தமிழகத் திருக்கோயில்களின் நலனை மேம்படுத்திடும் மகத்தான பணியினை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் அன்றாட சாதனைகளை நாள்தோறும் நாளிதழ்கள்,  ஊடகங்கள்,  சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள்  அனைவரும் அறியும் வண்ணம் வெளியிடப்பட்டு வருகிறது.  

முதன்முதலாக சென்னை வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சொத்துக்கள் 6.06.2021 அன்று மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களின் சொத்துக்கள் வெகு விரைவாக மீட்கப்பட்டு வருகின்றன.  மீட்கப்பட்ட அனைத்தையும் தொகுத்து அழியாத ஆவணங்களாக அச்சுப் பிரதிகளாக அனைவரும் அறிந்து கொள்வதற்காக வெளிப்படைத் தன்மையுடன் இந்நூல் வெளியிடப்படுகிறது. 

இதில் 7.05.2021 முதல் 31.03.2022 வரை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துக்களின் விவரம், திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலம், மனை, கட்டிடம், திருக்குளம் விவரங்கள் ஆகியவை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.  திருக்கோயில்கள் நீடித்து நிலைபெறத்தக்க வழிபாட்டுத் தலங்களாகவும், பல்லாண்டுகளாக இறை அன்பர்களுக்கு  பல்வேறு வசதிகளை செய்துதருவதற்கு வாய்ப்பான இடங்களாகவும் இருந்து வருவதற்கு இச்சொத்துக்களே காரணமாக   விளங்கி வருகின்றன. 

இத்தகைய விலை மதிக்க முடியாத திருக்கோயில் சொத்துக்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வருவதுடன் சமய தலைவர்கள் கற்பித்த பல்வேறு மரபுகள், நடைமுறைகள், தினசரி பூஜை முறைகள், வழிபாடுகள், காலமுறை திருவிழாக்கள், திருக்கோயில் புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்பு பணிகள் ஆகியவை திருக்கோயிலுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுடன் கவனமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் திருக்கோயில்களின் சொத்துக்களை பாதுகாக்க இந்நூல் அடிப்படை ஆதாரமாக விளங்கும். மீட்கப்பட்ட சொத்துக்கள் ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு ர்சுஊநு என்ற பெயர் பொறிக்கப்பட்ட கற்கள் நடப்பட்டு வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!