முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவான் மீது சீனா படையெடுத்தால் அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும் அதிபர் ஜோ பைடன் சூளுரை

திங்கட்கிழமை, 23 மே 2022      உலகம்
Joe-Biden 2022 02 19

தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டு பிரதமர் மர்ஃபுமியோ கிஷிடாவுடன் சேர்ந்து கூட்டாக அதிபர் ஜோ பைடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உக்ரைன் மீது ரஷ்யா  படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் ரஷ்யாவின்  படையெடுப்பை முறியடிக்க உக்ரைன்னுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதேபோல தற்போது சீனாவும், 'ஒருங்கிணைந்த சீனா' என்ற கொள்கையின் அடிப்படையில் அதன் அண்டை நாடான தைவான் மீது படையெடுக்க திட்டமிட்டுள்ளது.

ஏக சீனா என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டாலும், படைபலத்தால் தைவானை சீனா கைப்பற்றுவதை ஏற்க முடியாது என்று கூறினார். அவ்வாறு சீனா செய்தால், அது ஆபத்துடன் விளையாடுவதற்கு சமம். தைவான் மீது சீனா படையெடுத்தால், அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும். தைவானுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவங்கள் போராடும் என குறிப்பிட்டார். உக்ரைனில் நடந்தது போன்று மற்றொரு படையெடுப்பை அனுமதிக்க முடியாது என்றும் அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்தார். அமெரிக்க அதிபர் பைடனின் கருத்தை வரவேற்பதாக தைவான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. சீனாவில் கடந்த 1949ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது.

ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின்ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டுமின்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் தைவான் மீது சீனா படை எடுத்தால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!