முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்க கோரி பயங்கர கலவரம்: ஆந்திரா, கோணசீமாவில் 2-வது நாளாக 144 தடை - இணையதள சேவை துண்டிப்பு

புதன்கிழமை, 25 மே 2022      இந்தியா
WhatsApp 2022-05-25

Source: provided

திருமலை : அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்க கோரி ஆந்திராவில் நடந்த பயங்கர கலவரம் காரணமாக நேற்று கோணசீமாவில் 2வது நாளாக 144 தடை நீட்டிக்கப்பட்டு, இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் இருந்த 13 மாவட்டங்களை பிரித்து கூடுதலாக 13 புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டது. அதில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்த அமலாபுரத்தை, மாவட்ட தலைநகராக வைத்து கோணசீமா மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் சூட்ட அரசு முடிவு செய்து அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் பெயரை நீக்கிவிட்டு மீண்டும் கோணசீமா மாவட்டம் என்ற பெயரே தொடர வேண்டும் என பல்வேறு சமூகத்தை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று முன்தினம் அமலாபுரம் நகரிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணி சென்றனர். அப்போது சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அங்கு ஏற்கனவே, கூட்டங்கள் அல்லது பேரணிகளை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதை மீறி ஏராளமானோர் திரண்டனர்.

பேரணியை போலீசார் தடுத்ததால் கலவரம் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர். ஆத்திரமடைந்த சிலர், எஸ்பி வாகனம் மற்றும் பஸ்கள் மீது கற்களை வீசினர். இதில் எஸ்பியின் பாதுகாவலர் காயமடைந்தார். பல வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. போராட்டத்தை கட்டுப்படுத்த எஸ்பி சுப்பா தடியடி நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் கல்லூரி பஸ்சில் ஏற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள், அந்த பஸ்சை தீ வைத்து கொளுத்தினர். 

மேலும், நீர்பாசனத்துறை அமைச்சர் விஸ்வரூப் முகாம் அலுவலகம், அமலாபுரம் எம்எல்ஏ சதீஷின் வீடு ஆகியவற்றை சூறையாடி தீ வைத்து கொளுத்தினர். மேலும் பல்வேறு வாகனங்களை எரித்தனர். இதனால் பல்வேறு இடங்கள் போர்க்களமாக மாறியது. கடைகள் அடைக்கப்பட்டன. அமலாபுரத்தில் 4 டிஎஸ்பிக்கள், 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட பெயர் மாற்ற விவகாரம் தற்போது முதல்வர் ஜெகன்மோகன் அரசுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.

இந்நிலையில் மீண்டும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் அமலாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று போலீசார் விடியவிடிய 2வது நாளாக குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மீண்டும் கலவரம் ஏற்படாமல் இருக்க 144 தடை உத்தரவு 2வது நாளாக நேற்று நீட்டிக்கப்பட்டுள்ளது. கலவரப்பகுதியில் இணையதள சேவையை மாநில அரசு தற்காலிகமாக துண்டித்துள்ளது. நிலைமை சரியானபட்சத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என மாநில போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!