முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த சுற்றுலா துறைக்கு அதிக முன்னுரிமை : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      இந்தியா
Nirmala-Sitharaman 2023 02

Source: provided

புதுடெல்லி : நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த சுற்றுலாத் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2023-24ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, அவர் ஆற்றிய உரை: ''அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் இது. முந்தைய பட்ஜெட்கள் மூலம் உருவான வலிமையான கட்டமைப்பின் மீது மிகுந்த நம்பிக்கையை அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டில் அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ப இது தயாரிக்கப்பட்டுள்ளது.

நமது தற்போதைய நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வளர்ந்த நாடுகளைவிட அதிகம். கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் மீதான போர் போன்ற சவால்களை எதிர்கொண்டு இந்த வளர்ச்சி சாத்தியாக இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் சர்வதேச அளவில் ஒளிபொருந்தியதாக இருப்பதாக உலகம் அங்கீகரித்துள்ளது. சவால்களுக்கு மத்தியில் நமது பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது. நாட்டின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது ஒரே இலக்கு.

நாட்டின் வளர்ச்சியின் பலன் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்டவர்கள், எஸ்சி, எஸ்டி ஆகியோருக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நாம் தனித்துவமான டிஜிட்டல் பொது கட்டமைப்பை உருவாக்கி உள்ளோம். ஆதார், கோவின், யுபிஐ ஆகியவை இதற்கு உதாரணங்கள். இதேபோல், கொரோனா தடுப்பூசி வழங்குவதில் மிகப் பெரிய அளவிலும், எதிர்பாராத வேகத்திலும் நாம் செயல்பட்டுள்ளோம். கொரோனா காலத்தில் ஒருவரும் உணவின்றி உறங்கச் செல்லக்கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு, 28 மாதங்களுக்கு இலவசமாக உணவுப் பொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அனைவருக்கும் உணவு மற்றும் சரிவிகித உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அதற்கான திட்டம் கடந்த ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ஆகும் 2 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசே ஏற்கிறது.

சவாலான காலகட்டத்தில் இந்தியா ஜி20 தலைமையை ஏற்றிருக்கிறது. உலக பொருளாதார வரிசையை மாற்றுவதற்கான வலிமையை இது இந்தியாவுக்கு வழங்கும். உலகமே ஒரு குடும்பம் என்ற தத்துவத்திற்கு இணங்க, மக்களை மையப்படுத்திய திட்டங்களை கொண்டு வருவதோடு, சர்வதேச சவால்களை எதிர்கொண்டு, நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சியை கட்டமைக்க வேண்டும் எனும் நோக்கோடு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து