முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமான் : பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது

சனிக்கிழமை, 18 நவம்பர் 2023      ஆன்மிகம்
Tiruchendur 2023-11-18

Source: provided

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.  தொடர்ந்து 5 நாட்கள் காலை மற்றும் மாலையில் யாக சாலை பூஜைகள் நடந்தன. விழா நாட்களில் தினமும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 

பின்னர் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் மஞ்சள் பொடி, மா பொடி, இளநீர், தேன், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. 

கந்தசஷ்டி திருவிழாவின் 6-ம் நாளான நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. 

தொடர்ந்து யாகசாலையில் நடந்த தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விசால மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் திருவாவடுதுறை ஆதீனம் கந்த சஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. 

ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீவரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படை வீரர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலை -2.45 மணிக்கு கோவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். மாலை - 4.10 மணிக்கு, சுவாமி ஜெயந்தி நாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபத்மனை வதம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டார். 

முதலில் மாயையே உருவாக கொண்ட யானைமுகன் தனது பரிவாரங்களுடன், முருக பெருமானை நோக்கி போர் புரிய சுற்றி வந்து சுவாமிக்கு எதிரே வந்து நின்றான். மாலை 4.35மணிக்கு யானை முகம் கொண்ட தாரகாசூரனை, முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். 

அதன் பிறகு கன்மம் உருவம் கொண்ட சிங்கமுகாசூரன், அதேபோல் முருகனை வலம், இடமாக சுற்றி வந்து நேருக்கு நேர் போரிட தயாரானான். அவனையும் முருகப்பெருமான் தன் வேலால் வதம் செய்தார். 

சகோதரர்களை தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மன் தனது படை வீரர்களுடன் வேகமாக முருக பெருமானுடன் போர் புரிய வந்தான். முருகக் கடவுள் வேல் எடுத்து சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். அப்போது வானத்தில் கருடன் சுற்றி வட்டமிட்டது. கடற்கரையில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது. 

இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார். 

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்திற்கு சென்றார். அங்கு சினம் தணிந்த முருகனுக்கும், வள்ளி-தெய்வானை அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதிக்கு சென்றார். அங்கு இருந்த கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம்(சாயாபிஷேகம்) நடந்தது. 

பின்னர் விரதம் இருந்த பக்தர்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தகடுகள் வழங்கப்பட்டன. சூரசம்ஹாரம் நடந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி பல மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹாரத்தை காண கோவிலுக்கு வந்து இருந்தனர். 

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே டி.வி.க்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் சூரசம்ஹார விழாவை கூட்ட நெரிசல் இல்லாமல் பார்க்க பெரிய டிஜிட்டல் திரை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்தன. வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்பட்டன. 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தன. இதே போன்று திருச்செந்தூர்- நெல்லைக்கு சிறப்பு ரயில் விடப்பட்டு இருந்தது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என  2500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

பக்தர்கள் கடலில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்கு கடலில் தடுப்பு மிதவைகள் போடப்பட்டு இருந்தன. மேலும் கடலில் படகுகளில் தீயனைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் மாவட்ட நிர்வாகமும், கோவில் பணியாளர்களும் செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, சென்னை உயர்நீதமன்ற நீதிபதி ஆதி கேசவலு, மதுரை கிளை நீதிபதிகள் புகழேந்தி, பாலாஜி, தூத்துக்குடி மாவட்ட நீதிபதி செல்வம், மாவட்ட குற்றவியல் தலைமை நீதபதி செல்வக்குமார், திருச்செந்தூர் சார்பு நீதி மன்ற நீதிபதி வஷித் குமார், திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், திருச்செ,ந்தூர் ஒன்றிய குழு தலைவர் செல்வி வடமலை பாண்டியன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் காமராசு நாடார், பா.ஜ.க. தூத்துக்குடி மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன், ஓட்டல் மணி அய்யர் ரமணி, விவேகா கன்ஸ்ட்ரக்சன் நாராயணன், வெங்கடேசன் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து  கொண்டனர்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து