முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      தமிழகம்
Coonoor-Sims-Park

ஊட்டி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். 

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டு கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, காய்கறி கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 10-ம் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. அன்றைய தினம் ரோஜா கண்காட்சியும் தொடங்கி நடைபெற்றது. ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி நிறைவடைந்து விட்டது.

இந்த நிலையில் நேற்று குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி தொடங்கியது. இதனையொட்டி பூங்கா முழுவதும், பல்வேறு வகையான பழ வகைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக, பூங்காவின் நுழைவு வாயிலில் கண்காட்சியின் 64-வது ஆண்டை நினைவூட்டும் வகையில் ஆப்பிள், அன்னாசி, மாதுளை, வாழைப்பழம், பலாப்பழம், ஆரஞ்சு உள்பட அனைத்து வகை பழ வகைகளையும் கொண்டு நுழைவு வாயில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

சிம்ஸ் பூங்கா தொடங்கி 150-வது ஆண்டு ஆவதையொட்டி அதனை கொண்டாடும் விதமாக பூங்காவில் மாதுளை, டிராகன், ஆரஞ்சு பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.  சுற்றுலா பயணிகள், குழந்தைகளை கவர்ந்திழுக்கும் வகையில் பழ வகைகளை கொண்டு பல்வேறு வனவிலங்குகளின் உருவங்கள், கார்ட்டூன் பொம்மைகளும் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. 

மேலும் சாத்துக்குடி, திராட்சை, ஸ்ட்ராபெரி பழங்களால் டைனோசர் உருவமும், எலுமிச்சை பழங்களை கொண்டு வாத்து உருவமும் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இதுதவிர, பேரிச்சம் பழம், ஸ்ட்ராபெரி, முந்திரி பழங்களால் நத்தை உருவமும், பூசணிக்காய், மாம்பழங்களை கொண்டு கார்ட்டூன் உருவமும் வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. 

இதுமட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்காக பூங்காவில் 3.14 லட்சம் மலர் செடிகள் மலர் மாடங்களில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் கண்காட்சியில் தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு ஸ்டால்கள், அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

 அங்கு தோட்டக்கலைத்துறை மற்றும் உள்ளூர் வியாபாரிகள் பல்வேறு வகையான பழங்கள், அரிய வகை பழங்களையும் கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளனர். 

இந்த பழ கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அருணா தொடங்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சி தொடங்கியதை அடுத்து நேற்று காலை முதலே குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. 

சுற்றுலா பயணிகள், பூங்காவில் பூத்துக்குலுங்கிய மலர் செடிகளை கண்டு ரசித்தனர். மேலும் பூங்காவில் பல்வேறு பழங்களை கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டிராகன், கிங்காங், முயல், வாத்து, டைனோசர் போன்ற உருவங்களை பார்த்து ரசித்தனர். 

குழந்தைகள் கார்ட்டூன் பொம்மைகள், வனவிலங்குகளின் உருவங்களை பார்த்ததும் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியடைந்தனர். அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.  சுற்றுலா பயணிகள் வருகையால் பூங்கா அருகே உள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து