முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏற்காட்டில் கோடை விழா நிறைவு: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      தமிழகம்
Aarcaud 2024-05-18

Source: provided

சேலம் : ஏற்காட்டில் கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், விடுமுறை நாள் என்பதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். ஆனால் மலர்க்கண்காட்சி மட்டும் வரும் 30-ம் தேதி வரை நீட்டிப்பு  செய்யப்பட்டுள்ளது. 

மலைகளின் அரசன் என அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47-வது கோடை விழா மலர்கண்காட்சி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. கோடை விழாவை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏற்காட்டில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.  

குறிப்பாக, அண்ணாபூங்காவில்  தோட்டக்கலைத்துறை சார்பில் அங்கு 5.5 லட்சம் மலர்களை கொண்டு, காற்றாலை, நண்டு, சிற்பி, ஆட்டோபஸ், கடல் குதிரை, நட்சத்திர மீன் ஆகிய கடல்வாழ் உயிரினங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்களான டொனால்டு டக், மிக்கி மௌஸ், டாம் அன்ட் ஜெரி மற்றும் அலங்கார மலர் வளைவுகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

இதனிடையே, 47வது கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது.  கோடை விழா இறுதிநாள் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருந்தது. 

 நேற்று காலை முதலே ஆர்வத்துடன் ஏற்காட்டிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், அண்ணாபூங்காவில் உள்ள மலர்கண்காட்சியை பார்த்து ரசித்தனர்.   இதேபோல் ஏற்காடு ஏரியில் உள்ள படகு இல்லத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.  குடும்பத்துடன் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.   இதேபோல், ஏரி பூங்கா, மான் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி, மீன் காட்சியகம், கரடியூர் காட்சி முனை, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் மலை, பக்கோடா பாயிண்ட் என அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

 மேலும் இறுதிநாளான நேற்று, குழந்தைகளின் தளிர் நடை போட்டி நடந்தது. இதில், ஒரு வயது முதல் 5 வயது வரையிலான நூற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகளின் நடனம், ஒய்யாரமான நடை, தினசரி நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு மதிப்பெண்கள் வழங்கி, பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த 22-ம் தேதி முதல் 5 நாட்களாக நடந்து வந்த ஏற்காடு கோடை விழா நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.  

இந்த நிலையில் ஏற்காடு அண்ணாபூங்காவில் 5.5 லட்சம் மலர்களால் ஆன உருவங்கள் மற்றும் 30 ஆயிரம் பூந்தொட்டிகளுடன் மலர்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் கவர்ந்துள்ள இந்த மலர்கண்காட்சியை மேலும் நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மலர்கண்காட்சி மட்டும் வரும் 30-ம் தேதி வரை, மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து