Idhayam Matrimony

கீப்பராக துருவ் ஜுரெல்: பி..சி.சி.ஐ.

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

இந்தியா - இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில்  முதலில் பேட் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் அடித்திருந்தது.   முன்னதாக முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், 34-வது ஓவரில் பந்தை பாய்ந்து விழுந்து பிடிக்க முயற்சித்த போது காயமடைந்தார். இடது கை ஆள்காட்டி விரலில் காயமடைந்த அவர் வலியால் துடித்தார். தொடர்ந்து கீப்பிங் செய்ய இயலாது என்று கூறியதால் பெவிலியன் திரும்பினார் 

அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல் பணியாற்றினார். அவரது காயத்திற்கு இந்திய மருத்துவக்குழு சிகிச்சை அளித்தது. இருப்பினும் பண்ட் 2-வது நாள் ஆட்டத்தில் களத்திற்கு திரும்புவாரா? இல்லையா? என்று கேள்வி நிலவியது. இந்நிலையில் 2-வது நாள் ஆட்டத்திலும் துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் பக்கத்தில், "இடது ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து ரிஷப் பந்த் குணமடைந்து வருகிறார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரது முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 2 ஆம் நாள் ஆட்டத்தில் துருவ் ஜுரெல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்படுவார்" என்று பதிவிட்டுள்ளது. 

__________________________________________________________________________________________________

ஜோ ரூட்டின் 37-வது சதம் 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று முன்தினம் (ஜூலை 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் விளையாடியது. முதல் இன்னிங்ஸில்  இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று (ஜூலை 11) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து டெஸ்ட் போட்டிகளில் தனது 37-வது சதத்தை ஜோ ரூட் பதிவு செய்தார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் (36 சதங்கள்) விளாசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இருவரின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். சதம் விளாசி அசத்திய ஜோ ரூட், சிறிது நேரத்திலேயே பும்ரா பந்துவீச்சில் 104 ரன்களில் போல்டானார்.

__________________________________________________________________________________________________

ஒலிவியா ஸ்மித் சாதனை

கனடாவைச் சேர்ந்த ஒலிவியா ஸ்மித் (20 வயது) லிவர்பூல் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். இவரை ஆர்செனல் கால்பந்து அணி ஒரு மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.11.60 கோடி மதிப்புக்கு ஆர்செனல் அணி ஒலிவியா ஸ்மித்தை வாங்கியிருக்கிறது. 20 வுமன்ஸ் சூப்பர் லீக் தொடரில் அறிமுகமானபோது ஒலிவியா ஸ்மித் 7 கோல்கள் அடித்தார். 20 வயதான இளம் வீராங்கனை பார்வேடாக லிவர்பூல் அணியில் விளையாடுகிறார். இவர் விங்கராகவும் சென்டர் ஸ்டிரைக்கராகவும் விளையாடக் கூடியவர். 

ஸ்போர்டிங் லிஸ்பென் அணியிலிருந்த ஒலிவியா ஸ்மித் கடந்த ஜூலை 2024-இல் லிவர்பூல் அணியில் சேரும்போதே 2 லட்சம் யூரோ சம்பளத்திற்கு சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரியில் அமெரிக்க வீராங்கனை நவோமி கிர்மா 1.1 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.9.45 கோடி) வாங்கியதே மகளிர் கால்பந்து வரலாற்றில் அதிக சம்பளமாக இருந்து வந்தது. தற்போது, ஒலிவியா ஸ்மித் இதனை முறியடித்துள்ளார். மகளிர் சாம்பியன்ஸ் லீக்கை வென்ற ஆர்செனல் மேலும் அணியை வலுப்படுத்த இவ்வளவு தொகையைச் செலவிட்டுள்ளது.

__________________________________________________________________________________________________

முல்டரிடம் லாரா வலியுறுத்தல்

டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக தென்ஆப்பிரிக்கா அணி கேப்டனாக செயல்பட்ட வியான் முல்டர் 367 ரன்கள் எடுத்திருக்கும்போது, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்திருந்தார். இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவர் நினைத்திருந்தால் எளிதாக 400 ரன்களை கடந்து லாராவின் சாதனையை முறியடித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இது தொடர்பாக முல்டர் கூறுகையில் "பிரையன் லாரா ஒரு லெஜண்ட், அந்த அந்தஸ்துள்ள ஒருவர் அந்த சாதனையை தக்க வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

எனக்கு மீண்டும் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்தால், நான் இப்போது செய்ததைதான் அப்போதும் செய்வேன். நான் டிக்ளேர் செய்வது குறித்து பயிற்சியாளரிடமும் பேசினேன். சில சாதனைகள் லெஜண்டுகளுடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட லெஜண்டுகளில் ஒருவர் லாரா அவர் தெரிவித்தார்" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் "லாரா தன்னிடம் பேசினார். அப்போது 400-ஐ நோக்கி சென்றிருக்க வேண்டும். சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று அவர் கூறினார். எனக்கு மீண்டும் வாய்ப்பு வந்தால், அவருடைய ஸ்கோரை விட அதிக ஸ்கோர் அடிக்க வேண்டும் அவர் விரும்புகிறார்" என முல்டர் தெரிவித்துள்ளார்.

__________________________________________________________________________________________________

அயர்லாந்து வீரர் சாதனை

அயர்லாந்தில் உள்ளூர் டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது. முதலில் பேட் செய்த மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. கேப்டன் கர்டிஸ் காம்பெர் 44 ரன்னும், பீட்டர் மூர் 35 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 11 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது.12வது ஓவரை கர்டிஸ் காம்பெர் வீசினார். இதன் கடைசி 2 பந்தில் வில்சன், கிரஹாம் ஆகியோரை அவுட்டாகினர். மீண்டும் 14வது ஓவரை வீசிய கர்டிஸ், முதல் பந்தில் மெக்பிரைனை (29) அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து 2 மற்றும் 3-வது பந்தில் மில்லர், ஜோஸ் ஆகியோரை அவுட்டாக்கினார்.

இதனால் நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி 88 ரன்களில் சுருண்டு பரிதாபமாக தோற்றது. மன்ஸ்டெர் ரெட்ஸ் அணி 100 ரன்னில் வெற்றி அபார பெற்றது. இந்நிலையில், அயர்லாந்தின் கர்டிஸ் காம்பெர் 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். ஏற்கனவே, கர்டிஸ் காம்பெர் கடந்த 2021ல் நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.

__________________________________________________________________________________________________

கீப்பர் ஜேமி சுமித் சாதனை

இந்தியா - இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில்  முதலில் பேட் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் அடித்திருந்தது.  நேற்றைய நாளின் தொடக்க ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ராவின் முதல் பந்திலேயே பவுண்டரி அடுத்த ஜோ ரூட் தனது 37-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இருப்பினும் இங்கிலாந்து அணி பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பென் ஸ்டோக்ஸ் 44 ரன்களிலும், ஜோ ரூட் 104 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர்.

இதனால் தடுமாறிய இங்கிலாந்து அணியை விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் (37 ரன்கள்*) மற்றும் பிரைடன் கார்ஸ் (16 ரன்கள்*) கைகோர்த்து காப்பாற்றினர். இதில் ஜேமி சுமித் 10 ரன்கள் அடித்திருந்தபோது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,000 ரன்களை கடந்தார். இந்த 1,000 ரன்களை 1,303 பந்துகளில் ஜேமி சுமித் அடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 1,000 ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

__________________________________________________________________________________________________

தந்தைக்காக மகன் செய்த செயல்

லண்டனில் நடைபெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செம் வீர்பெக்- கேடரினா சினியாகோவா ஜோடியும் ஜோ சலிஸ்பெரி- லூயிசா ஸ்டெபானி ஜோடியும் மோதினார்கள். இந்தப் போட்டியில் 2-0 என செம் வீர்பெக்- கேடரினா சினியாகோவா வென்று பட்டத்தைக் கைப்பற்றினார்கள். போட்டி முடிந்தபிறகு நெதர்லாந்தைச் சேர்ந்த செம் வீர்பெக் தனது தந்தையின் பிறந்த நாளுக்காக அனைவரையும் பாடல் பாடும்படிக் கூறினார். செம் வீர்பெக் கூறியதாவது: இது நிச்சயமாக எனது தந்தைக்குப் பிடிக்காது. ஆனால், எனக்கு மிகவும் பிடிக்கும். 

இன்று எனது தந்தையின் பிறந்த நாள். அதனால், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்தக் கோப்பை அவருக்குச் சமர்ப்பணம். இதற்கு முன்பாக நான் இதைச் செய்ய விரும்புகிறேன். அவரது பெயர் பிராங். அவருக்காக நாம் அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினால் நன்றாக இருக்கும். தயாரா? மூன்று, இரண்டு, ஒன்று. பிறந்த நாள் வாழ்த்துகள் டியர் பிராங் என்றார். செம் வீர்பெக் உடன் இணைந்து பார்வையாளர்கள் அனைவரும் வாழ்த்துப் பாடலை இசையமைத்துக்கொண்டே பாடினார்கள். அவரது தந்தை ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இந்த விடியோவை விம்பிள்டன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இந்த விடியோ வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து