முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடரை வென்ற இந்திய அணி

வெள்ளிக்கிழமை, 26 செப்டம்பர் 2025      விளையாட்டு
INDIA 2024-12-04

Source: provided

இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19- வயதுக்குட்பட்டோர்) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதன் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 280 ரன்கள் எடுத்தது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 86 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 281 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா 28.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 113 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 167 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் கிளான் படேல் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றி அசத்தியது. 

_________________________________________________________________________________________

ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய திட்டம்

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார். 2021 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய சங்ககரா வழிநடத்தலில் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இருப்பினும் 2024 உலகக்கோப்பை வெற்றிக்கு இந்திய அணியை வழிநடத்திய பயிற்சயாளர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரானார்.

ஆனால் சஞ்சு சாம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகளை தொடர்ந்து அண்மையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை துறந்தார். இதனால் 2026 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த மீண்டும் குமார் சங்ககராவையே தலைமை பயிற்சியாளராக்க ராஜஸ்தான் ராயல்ஸ் முடிவெடுத்துள்ளது. தற்போது குமார் சங்ககரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தில் கிரிக்கெட் இயக்குநராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

_________________________________________________________________________________________

மே.இ.தீவுகள் அணி வீரர் விலகல்

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளனர். இந்தத் தொடர் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 15 பேர் கொண்ட இந்திய அணியும் நேற்று(செப்.26) அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால், அந்த அணி பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால், அவருக்குப் பதிலாக 22 வயதான ஜோஹன் லெய்ன் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு விளையாட அழைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, “வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக அக்டோபர் 18 முன்னர், ஷமர் ஜோசப்பின் காயம் பற்றி மறுமதிப்பீடு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

_________________________________________________________________________________________

குல்தீப் யாதவ் இம்பேக்ட் வீரர் 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் மோதின. இதில் டாஸ் ஜெயித்த வங்காளதேச பொறுப்பு கேப்டன் ஜேக்கர் அலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சைப் ஹசன் 69 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

முன்னதாக ஆசிய கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வீரருக்கு அணி நிர்வாகம் சார்பில் ‘இம்பேக்ட் வீரர்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அதன்படி இந்த போட்டியின் இம்பேக்ட் வீரராக 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

_________________________________________________________________________________________

பாகிஸ்தான் அணி கேப்டன் சவால்

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் துபாய், அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் நடந்த சூப்பர்-4 சுற்று போட்டியில் வங்கதேசத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 28-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதுகிறது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறியதாவது:-

இந்த மாதிரியான ஆட்டங்களில் நீங்கள் வெற்றி பெற முடிந்தால், நீங்கள் ஒரு சிறந்த அணியாக இருக்க வேண்டும். அனைத்து வீரர்களும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். பேட்டிங்கில் சில முன்னேற்றம் தேவைப்படுகிறது. அதற்காக நாங்கள் உழைப்போம். ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் பந்து வீசிய விதம் சிறப்பா னது. வெற்றி பெறுவதற்கான வழிகளை நாங்கள் கண்டு பிடித்து வருகிறோம். இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத இருக்கிறோம். மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இறுதிப்போட்டியில் நாங்கள் இந்தியாவை வெல்ல முயற்சிப்போம். இந்தியாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

_________________________________________________________________________________________

பாக். அணி பயிற்சியாளர் நம்பிக்கை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறும்போது, “நாங்கள் 14 ஆம் தேதியும், 21 ஆம் தேதியும் விளையாடியதை நன்றாக அறிவோம். ஆனால், இறுதிப்போட்டியில் வெற்றிபெற வேண்டியது மிகவும் முக்கியமானது. நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். இந்த வாய்ப்புக்கு நாங்கள் தகுதியானவர்கள். அதனை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்போம். இதுவரை நடந்த அனைத்துப் போட்டிகளிலும் கோப்பையை வெல்ல கடுமையாக முயற்சித்ததாகவே கருதுகிறேன். நாங்கள் கிரிக்கெட்டில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தான் வீரர்கள் ஷாகிப்ஸாதா ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் ரௌப் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த மைக், “நாங்கள் விளையாட்டின் பக்கத்தில் இருந்து பார்க்க விரும்புகிறோம். முக்கியமான ஆட்டத்தில் வீரர்கள் ஆர்வ மிகுதியுடன் இருப்பார்கள். என்னைவிட உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒரு சிறந்த விளையாட்டைக் காண்பிப்பதுதான் எங்கள் வேலை” எனத் தெரிவித்தார்.

_________________________________________________________________________________________

குல்தீப் யாதவ் புதிய மைல்கல்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன்மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் குல்தீப் யாதவ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். ஆசிய கோப்பையில் சிறப்பாக பந்துவீசி வரும் குல்தீப் யாதவ் நடப்பு தொடரில் மட்டும் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரனைப் பின்னுக்கு தள்ளி குல்தீப் யாதவ் 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். மேலும், ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதுவரை குல்தீப் யாதவ் மொத்தம் 31 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்தப் பட்டியலில் 33 விக்கெட்களுடன் மலிங்கா முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

_________________________________________________________________________________________

வங்கதேச பயிற்சியாளர் விளக்கம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்தது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷாகின் மற்றும் நவாஸின் கேட்ச்சுகளை தவறவிட்டபோது, ஆட்டத்தின் போக்கு மாறியது. அதற்கு முன்பு வரை, வங்கதேசம் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வந்தது. சில கேட்ச்சுகளை அதிகப்படியான லைட் வெளிச்சத்தின் காரணமாக தவறவிட்டார்கள். ஆனால், சில கேட்ச்சுகளை வீரர்கள் கண்டிப்பாக பிடித்திருக்க வேண்டும்.

 

வங்கதேச அணியின் தோல்விக்கு காரணம் தவறான முடிவுகளே. அனைவரும் நாங்கள் எளிதில் வெற்றி பெறுவோம் என நினைத்தார்கள். ஆனால், எங்களது வீரர்கள் சரியான ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடவில்லை. இலங்கைக்கு எதிரான போட்டியில் 169 ரன்களை துரத்திப் பிடித்து வெற்றி பெற்றோம். அணியில் கேப்டன் லிட்டன் தாஸ் இல்லாதது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. பேட்டர்கள் சரியான ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடியிருக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து