முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25 போலீசாரை திணறடித்து தப்பிச் சென்ற குற்றவாளி

புதன்கிழமை, 23 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை, மார்ச் 23 - மும்பையில் 25 போலீஸ்காரர்களை திணறடித்து அவர்கள் கையில் சிக்காமல் ஒரு குற்றவாளி தப்பிச் சென்றான். போலீசார் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டும்கூட எந்த வித காயமும் இல்லாமல் அவன் சாமர்த்தியமாக தப்பி சென்றான்.

மும்பை ஜோகேஸ்வர் பகுதியில் உள்ள ஆசம்காத் என்ற இடத்தைச் சேர்ந்தவன் ஆசிப் அலி.  இவன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சங்கிலி பறிப்பு,  திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இவன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.

இவன் ஆசம்காத் பகுதியில் உள்ள குடிசை பகுதியில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அவன் தங்கியிருப்பதாக கூறப்படும் ஒரு குடிசை வீட்டை போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட போலீஸ் படையினர் சுற்றி வளைத்தனர்.

போலீசாரை கண்ட அந்த குற்றவாளி குடிசை வீட்டின் மீது ஏறி நின்று கொண்டான். அவனை பிடிக்க 3 போலீஸ்காரர்கள் கூரையின் மீது ஏறினர். ஆனால் அவர்களை அவன் சாமர்த்தியமாக கீழே தள்ளிவிட்டு அதே இடத்தில் ஒளிந்திருந்தான்.

கீழே போலீஸ் அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் வீட்டை சுற்றி நின்று கொண்டிருக்கையில் அவன் அவர்களுக்கு தெரியாமல் கீழே குதித்து ஓட்டம் பிடிக்க துவங்கினான்.

அவன் ஓடுவதை பார்த்த போலீசார் அவனை பிடிக்க அவனை துரத்திச் சென்றனர். ஆனால் அவனை பிடிக்க முடியவில்லை. துரத்திச் சென்ற போலீஸ்காரர்கள் 3 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் துப்பாக்கி வைத்திருந்த ஒரு போலீஸ்காரர் அந்த குற்றவாளியை நோக்கி 3 முறை சுட்டார். ஆனால் அவன் மீது குண்டுகள் எதுவும் பாயவில்லை. அதற்குள் அவன் சந்து பொந்துகள் வழியாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டான். அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த இடத்திலிருந்து புறப்பட்டு தங்களது உயர் அதிகாரியிடம் நடந்த சம்பவத்தை விவரித்தனர்.

இந்த குற்றவாளியை பிடிக்க அந்த பகுதியில் போலீசார் திரண்டபோது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இப்போது தப்பி ஓடிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் பல இடங்களில் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்